;
Athirady Tamil News

கண்டி பிரபல விகாரையில் திருட்டுச் சம்பவம்

0

கண்டி – ஹந்தானை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தகிரி மகா சேய விகாரையில் நேற்று (23) அதிகாலை இடம்பெற்ற அதிர்ச்சிகரமான திருட்டுச் சம்பவம், பௌத்த மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகாரைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், விகாரையின் கருவறைக்குச் செல்லும் இரண்டு வலுவான இரும்புக் கதவுகளையும் பலவந்தமாக உடைத்துள்ளனர்.

உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பூசைப் பொருட்கள் மற்றும் புனித கலசத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க கற்கள் பதிக்கப்பட்ட தங்க மாலைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து விகாரையின் விகாராதிபதி கங்கசிறிபுர தம்மாலோக தேரர் தெரிவிக்கையில், “திருட்டுச் சம்பவம் அதிகாலை நேரத்தில் மிகவும் திட்டமிட்ட முறையில் நடந்துள்ளது. விகாரையின் பாதுகாப்பு அம்சங்கள் திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டுள்ளன” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

சம்பவத்தால் விகாரைக்கே பெரும் சேதம் விளைந்திருந்தாலும், அங்கு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புனித “சர்வக்ஞ தாதுக்கள்” மற்றும் விகாரையின் பிரதான தங்கக் கலசம் ஆகியவற்றுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை .

சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவின் பேரில், கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விகாரையைச் சுற்றியுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.