இடியுடன் கூடிய மழை; கடற்பரப்புகளில் 50–60 கிலோமீற்றர் பலத்த காற்று வீசும்
எதிர்வரும் 24 மணிநேரத்தில் புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கடல் வானிலை அறிக்கையொன்றினை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில பகுதிகளில் அது மணிக்கு 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காங்கேசந்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.