;
Athirady Tamil News

பதின்ம வயது பிக்கு தொடர் பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் மற்றுமொரு தேரரின் திருவிளையாடல் அம்பலம்!

0

அம்பாறை விகாரையொன்றில், 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டுத் தலைமறைவாகியிருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) மாலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அம்பாறை , மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்தகம பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலைமறைவான சந்தேக நபர்
குறித்த விகாரையில் தங்கியிருந்த ஐந்து இளம் பிக்குகளில் மூவர் அண்மையில் விகாரையை விட்டுத் தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் விகாரையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளத் தயாரான போதே, தேரரின் துஷ்பிரயோக விபரம் அம்பலமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விகாரையில் எஞ்சியிருந்த இரு இளம் பிக்குகளையும் வாக்குமூலம் பெறுவதற்காகப் பொலிஸார் அழைத்துச் சென்றனர். இதனையறிந்த சந்தேக நபரான 41 வயதுடைய பௌத்த தேரர், தீகவாவிப் பிரதேசத்திற்குத் தப்பியோடித் தலைமறைவாகியிருந்தார்.

பின்னர், மற்றுமொரு பௌத்த பிக்குவின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சந்தேக நபரான தேரர் தீகவாவிப் பகுதியிலிருந்து வந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவிடம் மத்திய முகாம் பொலிஸார் விரிவான வாக்குமூலத்தைப் பெற்று , அவரை மருத்துவப் பரிசோதனைகளுக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 41 வயதுடைய பௌத்த தேரரை புதன்கிழமை (03) அன்று அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேவேளை அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பிரபல தேரர் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.