திறைசேரி அதிகாரியின் மரணத்திற்கு இதுவே காரணம்; நீதிமன்றில் வெளியான விடயம்
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த ரங்க நிஷாந்த என்ற அதிகாரியின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே சம்பவித்துள்ளது என நால்வர் அடங்கிய விசேட சட்ட மருத்துவக் குழாம் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
இந்த விபரங்களை அந்த குழாத்தின் தலைவரும் விசேட சட்டவைத்திய அதிகாரியுமான இலங்கரத்ன பண்டா, குளியாப்பிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.
நீதிமன்றில் சாட்சியம்
கடந்த வழக்கு விசாரணையின் போது, உயிரிழந்தவரின் மனைவி, மகள் உள்ளிட்டோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி இலங்கரத்ன பண்டா, குளியாப்பிட்டிய தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் மோப்ப நாய் பிரிவை வழிநடத்திய சார்ஜன்ட் உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியமளித்தனர்.
முறைப்பாட்டாளர்கள் தரப்பில் வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண சாட்சியங்களை வழிநடத்தினார்.
உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்கள் மற்றும் நாடிகள் தொடர்பான மருத்துவ அறிவியல் பின்னணியை விளக்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, விசேட சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் விளக்கமளித்தார்.
மேற்கத்தேய மருத்துவ அறிவியலின் படி ‘உயிர் நாடி’ என பிரத்தியேகமாக அழைக்கப்படும் உடற்பகுதி எதுவும் இல்லை என்றும், இது குறித்து ஆயுர்வேத மருத்துவ பேராசிரியர்களுடனும் தாம் கலந்துரையாடி உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உடலத்தை மிகவும் நுணுக்கமாகப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்திய நான்கு விசேட வைத்திய அதிகாரிகளும், இவை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் என்றும், இதனால் ஏற்பட்ட அதிகளவிலான இரத்தப்போக்கு காரணமாக உடலுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என்றும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக சாட்சியமளித்தார்.
விசாரணையின் போது, உயிரிழந்தவரின் ஆடைகள், செருப்புகள் மற்றும் கத்தி ஆகியவற்றை வைத்தியர் அடையாளம் காட்டியதுடன், காயங்கள் ஏற்பட்ட இடங்களின் படங்களையும் நீதிமன்றப் பொறுப்பில் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பான அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னர், அதன் நிலைப்பாட்டையும் கருத்திற் கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 30ஆம் பிரிவின் கீழ் தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விபரங்களையும் பரிசீலித்த குளியாப்பிட்டிய நீதவான், வழக்கை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.