;
Athirady Tamil News

ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

0

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் இருநாடுகளும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்காப்பு நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக குவைத், பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ஈரான் ஏவிய டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.

ஈரான் கோபம்
ஹார்முஸ் நீரிணையை நோக்கி வந்த 40 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. மேலும் ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் கோருக்கில் உள்ள தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் ஈரான் கடும் கோபம் அடைந்தது. இதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேலும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக தெஹ்ரானில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது.

இஸ்ரேல் தாக்குதல்
அதே நேரத்தில் தங்கள் நாட்டு பிராந்தியத்தின் மீது ஏமன் ஏவுகணை வீசியதை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனாலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா அறிவுறுத்தல்
இதற்கிடையே, ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியர்களுக்கு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகரம் கூறும் போது, ஈரானில் அண்மையில் ஏற்பட்டுள்ள புதிய பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் யாரும் ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் . தற்போது ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி விரைவாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.