வெளிப்புறப் பாதுகாப்பும் உட்புற ஆபத்தும்!
செப்டம்பர் 30ஆம் திகதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற பிளை துபாய் FZ1073 விமானத்தில் ஒரு பயங்கரவாத தாக்குதல் முயற்சி நடைபெற்றது. அந்த விமானத்தின் துணை விமானியான ஹமாம் அல்-ஹமாமி, ஓமான் நாட்டைச் சேர்ந்தவர், விமானத்தின் விமானியின் அறையில் இருந்த அவசரக்கால கோடரியைப் பயன்படுத்தி, இந்தியரான முதன்மை விமானி கப்டன் ஸ்மித் மச்சார் மீது கடுமையாகத் தாக்கினார்.
உயிருக்குப் போராடியபோதும் கப்டன் ஸ்மித் மச்சார் சமயோசிதமாக செயற்பட்டு அவசரகால சமிக்ஞைகளை அனுப்பி விமானியின் அறைக் கதவைத் திறந்தார், மற்றும் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பிற ஊழியர்களின் உதவியால் தாக்குதலாளி கட்டுப்படுத்தப்பட்டார். விமானம் இரண்டு நிமிடங்களில் சுமார் 17,400 அடிகள் வேகமாக கீழே இறங்கியபோதிலும், கப்டன் விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சவுதி அரேபியாவில் பத்திரமாக தரையிறக்கினார்.
இந்தச் சம்பவம், சர்வதேச விமான போக்குவரத்தின் பாதுகாப்பு, உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் முறை மற்றும் விமானிகளின் பின்னணி பற்றிய சோதனைகள் என்பனபற்றியெல்லாம் பல கேள்விகளை எழுப்பின. ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தரப்பு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புகள் நடத்திய முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டன.
இதன்மூலம், தாக்குதலின் நோக்கம் தனிநபர் தீவிரவாதம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹமாமி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிரியாவில் கழித்துள்ளார். அங்குதான் அவர் தீவிரவாத சிந்தனைகளுக்கு ஈர்க்கப்பட்டிருக்கிறார். தாக்குதலுக்கு முன் அல்-கொய்தா அமைப்பிற்கு ஆதரவான கருத்துக்களைத் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த தாக்குதலை அவர் ஒரு தனிநபராகத்தான் திட்டமிட்டு நடத்தியுள்ளார். இதற்குப் பின்னணியில் எந்தவொரு பெரிய தீவிரவாத அமைப்பின் நேரடி பண உதவியோ அல்லது வழிகாட்டுதலோ இருக்கவில்லை என ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கப்டன் ஸ்மித் மச்சாரைக் கொன்றுவிட்டு, விமானத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, டெல் அவிவ் விமான நிலைய அதிகாரிகளுக்குச் சந்தேகம் வராத வகையில், விமானத்தைச் செலுத்தி, இறுதியில் பென் குரியன் விமான நிலையத்தின் கட்டடங்கள் மீதோ அல்லது உயரமான கட்டடங்கள் மீதோ மோதிப் பெரும் தாக்குதலை நடத்துவதே அவருடைய திட்டமாக இருந்துள்ளது. ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமும் அவருடைய மாற்று இலக்காக இருந்தது.
இஸ்ரேலுக்கான விமான வழித்தடத்தில் பணிபுரிவதற்காகவே திட்டமிட்டு ஃபிளை துபாய் நிறுவனத்தில் ஹமாமி பணியில் சேர்ந்துள்ளார்.
ஜூலை 2026இலேயே இதே போன்ற ஒரு தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அன்றைய விமானத்தில் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் ஊழியராகப் பணியாற்றியதால் அத்திட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
உலகிலேயே மிகக் கடுமையான விமான பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்ட நாடு இஸ்ரேல். இருப்பினும், அதிகார அமைப்புகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றக் குறைபாடுகளால் ஹமாமியை அவர்களால் முன்கூட்டியே கண்டறிய முடியாமல் போனது.இஸ்ரேலிய சட்டங்களின்படி, வெளிநாட்டு விமான நிறுவனங்களின் பாதுகாப்பைப் போக்குவரத்து அமைச்சு கவனிக்கிறது, பயணிகளுக்கான அச்சுறுத்தலை ஷின் பெட் கவனிக்கிறது, வெளிநாட்டு உளவுத் தகவல்களை மொசாட்கவனிக்கிறது. போக்குவரத்து அமைச்சு இது குறித்து வழங்கிய விளக்கத்தில், தங்களது வழக்கமான நடைமுறைகள் பயணிகளையும் விமான சுற்றளவையும் மட்டுமே கண்காணிக்கும்; விமானியின் அறையில் விமானியால் வரும் அச்சுறுத்தல்களைக் கையாளும் விதிகள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் விதிமுறைகளின்படி, விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே பயணிகள் மற்றும் ஊழியர்களின் பட்டியல் இஸ்ரேல் வரி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த தரவுகள் வெறும் நிர்வாகப் பட்டியலாகவே பார்க்கப்பட்டதே தவிர, ஷின் பெட் அல்லது மொசாட்டின் தீவிரவாதத் கண்காணிப்புப் பட்டியலில் ஒப்பிட்டுப் பார்க்கப்படவில்லை.
ஓமான் நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லை. ஹமாமிக்கு தீவிரவாத சிந்தனைகள் இருந்ததால்தான் ஓமான் எயார் (Oman Air) நிறுவனம் அவரை விமானி பொறுப்பில் இருந்து நீக்கி, அலுவலகப் பணிக்கு மாற்றியிருந்தது. இந்தத் தகவல் ஓமான் நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து கோப்புகளுக்குள்ளேயே முடங்கிப் போனதால், சர்வதேசப் பாதுகாப்பு அமைப்புகளுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ கிடைக்காமல் போனது. ஒரு நாட்டில் தீவிரவாதச் சந்தேகத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட ஒரு விமானி, முறையான குற்றவியல் தண்டனை எதுவும் பெறாமல், மற்றொரு நாட்டின் விமான நிறுவனத்தில் எளிதாக வேலைக்குச் சேர முடிவது மிகவும் ஆபத்தான நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றது. 9/11 தாக்குதலுக்குப் பிறகு உலகளவில் விமானிகளின் அறைக் கதவுகள் பலப்படுத்தப்பட்டு, பயணிகள் தீவிரமாகச் சோதிக்கப்பட்டனர். ஆனால், விமான அறைக்குள் ஏற்கனவே இருக்கும் ஒரு விமானியே அச்சுறுத்தலாக மாறினால் அதைத் தடுப்பதற்கான வழிகள் நடைமுறையில் இல்லை என்பது மிகவும் கவலைக்குரியது. ஆனால் பல தடுப்பு நடவடிக்கைகள் ஆபத்து நடைபெற்றதன் பின்னரேயே மேற்கொள்ளப்படுகின்றன.
விமானிகளை வேலைக்குச் சேர்க்கும்போது வழங்கப்படும் நன்னடத்தைச் சான்றிதழ்கள் மற்றும் மருத்துவச் சான்றிதழ்கள் மட்டுமே பார்க்கப்படுகின்றன. திடீரென ஏற்படும் மனநிலை மாற்றங்கள் அல்லது தீவிரவாத ஈர்ப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் சர்வதேசக் கட்டமைப்புகள் இதுவரை ஏற்படுத்தப்படாததும் கவலைக்குரியதே.
பிளை துபாய் FZ1073 சம்பவம், விமானப் போக்குவரத்து வரலாற்றின் வழக்கமான ‘வெளிப்புற அச்சுறுத்தல்’ என்பதிலிருந்து ‘உட்புற அச்சுறுத்தலும்’ ஏற்படலாம் என்ற புதிய கோணத்தில் சிந்திப்பதற்கான தேவையை உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு மற்றும் உலக நாடுகளின் உளவு அமைப்புகள் விமானப் பயணங்களில் பல மாற்றங்ளை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.
உலகளவில் அனைத்து வணிக விமானிகளின் செயல்பாடுகள் மற்றும் இடைநீக்கங்களைப் பதிவு செய்யும் உலகளாவிய அமைப்பொன்றை உருவாக்குவது, விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே ஊழியர்களின் பட்டியலும் நேரடியாகச் செல்லும் நாடுகளின் உளவுத்துறை தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டு விசாரிக்கப்படுவது.
விமானியின் அறைக்குள்வைக்கப்பட்டிருக்கும் அவசரக்காலக் கோடரிகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு விதிகளை மறுபரிசீலனை செய்வது போன்ற பல்வேறு மறுசீரமைப்புகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளன. இவையெல்லாம் காலத்தின்தேவை கருதி உடனடியாக அமுல்படுத்தப்படுவதும் அவசியம்.