;
Athirady Tamil News

திருகோணமலை கடற்படை முகாம் சித்திரவதை கூடம்; சீல் வைக்க நடவடிக்கை

0

திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 60 பேருக்கும் அதிகமான நபர்களை இங்கு தடுத்து வைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கப்பம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல பாரிய குற்றங்களுடன் இந்த இடத்திற்கு தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் விசாரணை
இந்த நிலையில், புலனாய்வு பிரிவினரின் இந்த நடவடிக்கை அவ்விசாரணைகளின் தீர்க்கமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்த இரகசிய சித்திரவதை முகாம் வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருகோணமலை நீதவான் விஜயம் செய்ய உள்ளார்.

தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தவிர, மேலும் பல நபர்கள் இந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகளுடன் கூடிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. கேகாலையைச் சேர்ந்த சாந்த என்பவரின் வழக்கு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பில் மேலும் இரு தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் கொழும்பு இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளன.

இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவரும், திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விபரங்களும் நீதிமன்றங்களுக்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளன.

இந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில நபர்களும், அது சார்ந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சில தரப்பினரும் தற்போதைய நிலையில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.