;
Athirady Tamil News

அமெரிக்கா: பாம்புபிடிப் போட்டியில் முதல் முறையாக பெண் சாம்பியன்!

0

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பகுதியில் நடைபெற்ற வருடாந்திர பாம்பு பிடிக்கும் போட்டியில், 29 வயது பெண் ஒருவர் வெறும் 10 நாட்களில் 60 பர்மிய மலைப்பாம்புகளைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

புளோரிடா பைதான் சேலஞ்ச்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவின் மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் சார்பில் நடத்தப்படும் ‘புளோரிடா பைதான் சேலஞ்ச்’ போட்டி, கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 11 முதல் ஜூலை 20 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. தெற்கு புளோரிடாவில் உள்ள எவர்க்ளேட்ஸ் தேசிய பூங்கா மற்றும் பிக் சைப்ரஸ் உள்ளிட்ட 8 அதிகாரப்பூர்வ சதுப்பு நிலப் பகுதிகளில் இப்போட்டி நடத்தப்பட்டது.

வெறுங்காலுடன் சதுப்பு நிலத்தில் வேட்டை

தொழில்முறை பாம்பு வேட்டைக்காரரான டெய்லர் ஸ்டான்பெரி, சதுப்பு நிலங்களில் வெறுங்காலுடன் நடந்து சென்று, வெறும் கைகளாலேயே 60 பர்மிய மலைப்பாம்புகளைப் பிடித்துள்ளார். இதில் 33 பெண் பாம்புகளும், 27 ஆண் பாம்புகளும் அடங்கும். குறிப்பாக, ஒரு இரவில் மட்டும் முட்டைகளிலிருந்து வெளிவந்த சுமார் 20 குட்டி மலைப்பாம்புகளை அவர் லாவகமாகப் பிடித்தார்.

முதல் பெண் சாம்பியன் -பரிசுத்தொகை

இந்த போட்டியின் வரலாற்றில் முதலிடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமையை டெய்லர் பெற்றுள்ளார். இந்த சாதனைக்காக அவருக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.4 லட்சம்) முதல் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் மொத்தமாக 934 பேர் பங்கேற்று, மொத்தம் 294 மலைப்பாம்புகளைப் பிடித்தனர்.

பாம்புகளைப் பிடிப்பதன் பின்னணி என்ன?

பர்மிய மலைப்பாம்புகள் புளோரிடாவின் பூர்வீக உயிரினங்கள் அல்ல; அவை வெளிநாட்டிலிருந்து வந்து பெருகிய ஆக்கிரமிப்பு இனமாகும். இவை எவர்க்ளேட்ஸ் சதுப்பு நிலங்களில் உள்ள அரிய வகைப் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் பிற உள்ளூர் உயிரினங்களை உணவாகக் கொண்டு, சுற்றுச்சூழல் சமநிலையைக் கடுமையாக பாதிக்கின்றன.

“பாம்புகளைக் கொல்வது எனக்குப் பிடிக்காது என்றாலும், புளோரிடாவின் இயற்கைச் சூழலையும் பூர்வீக உயிரினங்களையும் காப்பாற்றுவதற்காகவே இந்த பணியில் ஈடுபடுகிறேன்” என வெற்றிக்குப் பின் டெய்லர் ஸ்டான்பெரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.