வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காகத் திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முதியோர் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மண்ணின் பெருமையானது இம்மண்ணின் பெண்களின் அளப்பரிய துணிவிலேயே தங்கியுள்ளது.
‘பெண் தொழில்முனைவோர்கள் பொருளாதார ரீதியாக வலுவூட்டப்படும்போதே அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாரும் ஒரே வேலையைச் செய்தாலும், இருவருக்கும் சமமான ஊதியம் கிடைக்கின்றதா என்றால், இன்றும் இல்லை என்றே கூறவேண்டும்.
அரச நிறுவனங்களில் கூடப் பணிபுரியும் பெண்களின் குடும்பச் சூழல் குறித்துச் சிந்திக்கப்படுவதில்லை. எனவே, வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காகத் திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முதியோர் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்தியேகப் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.