நாடு முழுவதும் 143 இடங்களில் நாளை நெல் கொள்முதல் ஆரம்பம்
இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் வாரியம் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டதால், அதிக அறுவடை உள்ள பகுதிகளைக் அடையாளப்படுத்தி நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என வாரியத்தின் தலைவர் மஞ்சுலா பின்னலந்த கூறியுள்ளார்.
அதன்படி, நாடு முழுவதும் 143 இடங்களில் அமைந்துள்ள களஞ்சியசாலைகளில் இருந்து நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறை களஞ்சியசாலை
களஞ்சியசாலைகளின் கொள்ளளவு நிரம்பிவிட்டால், அருகிலுள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளை பயன்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட நெல் ஆலை உரிமையாளர்களும் தனியார் நிறுவனங்களும் அந்தக் களஞ்சியசாலைகளை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.