;
Athirady Tamil News

சக்கர நாற்காலியில் வந்து அதிகாரிகளை மிரள வைத்த வெளிநாட்டு பெண் ; சினிமா பாணியில் சம்பவம்

0

உடலுக்குள் இரகசியமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து வைத்து நாட்டிற்குள் கொண்டுவந்த 54 வயதுடைய அங்கோலா நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் 17ஆம் திகதி அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா மற்றும் தோஹா ஊடாக கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR654 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விசாரணைகள்
விமான நிலையத்திற்குள் வரும் போது அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தியவாறு பயணித்துள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகளின் விசாரணைகளின் போது, தனது உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 14 மாத்திரைகளை அந்தப் பெண் சுயவிருப்பின் பேரில் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

அத்துடன், மேலும் பல போதைப்பொருள் மாத்திரைகளைத் தான் விழுங்கியுள்ளதாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதிகாரிகளால் மீட்கப்பட்ட 14 மாத்திரைகளிலும் சுமார் 237 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான வெளிநாட்டுப் பெண்ணும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அவரது உடலுக்குள் எஞ்சியுள்ளதாகக் கருதப்படும் ஏனைய போதைப்பொருள் மாத்திரைகளை வெளியில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.