;
Athirady Tamil News

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவன் லக்ஸ்சயனுக்கு கௌரவிப்பு: ஆளுநர் பிரதம விருந்தினராக பங்கேற்பு!

0
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். இந்தப் பாராட்டைப் பார்த்து, இங்குள்ள ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்று, தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைக் கைப்பற்றிய யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் செல்வன் ஆனந்தசோதி லக்ஸ்சயனை கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பசிபிக் சிறுவர் மாநாட்டில் (BRIDGE SUMMER CAMP 2026) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கனிஷ்ட  தூதுவராகப் பங்கேற்றுச் சிறப்பித்தமைக்காகவும் இந்த மாணவன் விசேடமாகக் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவனைக் கௌரவித்த பின்னர் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டம் கல்வியில் கொடிகட்டிப் பறந்த ஒரு பொற்காலம் இருந்தது. தற்போது அந்த நிலையில் சிறு தளம்பல் காணப்படுகின்ற போதிலும், மாணவன் செல்வன் ஆனந்தசோதி லக்ஷ;யன் எமது முன்னைய நிலையை நாம் மீண்டும் எட்டலாம் என்ற நம்பிக்கையை எம்மத்தியில் விதைத்திருக்கின்றான்.

ஆனந்தசோதி லக்ஷ;யனை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அவர் தனது பாடசாலைக்கும் பெற்றோருக்கும் மிகப்பெரிய பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கின்றார். இந்த வெற்றியை அவர் அவ்வளவு இலகுவாக அடைந்திருக்க முடியாது. கல்வியில் அவர் காட்டிய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் என்பவற்றுக்குக் கிடைத்த பரிசாகவே இந்த வெற்றியும் கௌரவமும் அவரை வந்தடைந்துள்ளன.

இன்று இந்த மாணவனைப் பாராட்டுவதென்பது ஏனைய மாணவர்களையும் பெருமளவில் ஊக்குவிக்கும். பல மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த தூண்டலை ஏற்படுத்தும். ஏனைய மாணவர்களும் இவரைப் போல சாதனை படைக்க வேண்டும் எனச் சிந்திக்க வேண்டும்; அதற்காக அதீத அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் படிக்க வேண்டும். கல்வியால் உயர்ந்தால் மாத்திரம் போதாது, அதற்கேற்ப உங்கள் நற்பண்புகளையும், மனிதநேயத்தையும் நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்பாடசாலைக்கு எமது சமூகத்தில் உள்ள அதியுயர் மதிப்பை நான் நன்கு அறிவேன். இங்கு தமது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதே பல பெற்றோரின் பெருவிருப்பமாக இருக்கின்றது. தரம் 1 அனுமதிக்காக எத்தனையோ பெற்றோர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். பலர் என்னிடமும் வந்து பரிந்துரைத்துத் தருமாறு கோருவார்கள். ஆனால், நான் அதைச் செய்வதில்லை. ஒருவருக்குச் செய்தால் சகலருக்கும் அதைச் செய்ய வேண்டும். எனவே, இவ்வாறான தவறான முன்னுதாரணங்களுக்கு நான் ஒருபோதும் துணைபோவதில்லை. இப்பாடசாலை தேசிய ரீதியில் சாதனை படைக்கும் மாணவர்களைத் தொடர்ச்சியாக உருவாக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன், என்றார் ஆளுநர்.

பாடசாலை அதிபர்  எல்.சிவபாதம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கௌரவிப்பு நிகழ்வில், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன் கலந்துகொண்டார்.

மேலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பா.கஜதீபன், மாணவனின் பெற்றோர், மாணவனுக்குக் கற்பித்த ஆசிரியர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.