;
Athirady Tamil News

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று ஆய்வுப்பணி மேற்கொண்ட நாசா விஞ்ஞானிகள்

0

வாஷிங்டன்,

நாசா விஞ்ஞானிகள் அனில் மேனன் மற்றும் ஜெசிக்கா மெய்ர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புற பகுதிக்கு சென்று, விண்வெளியில் நடந்து ஆய்வுப்பணி மேற்கொண்டுள்ளனர்.

இது சர்வதேச விண்வெளி நிலையம் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட 281-வது விண்வெளி நடைப்பயணமாகும். இதில் ஜெசிக்கா மெய்ர் 6-வது முறையாகவும், அனில் மேனன் முதல் முறையாகவும் விண்வெளியில் நடந்து சென்றுள்ளனர். இந்திய நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த விண்வெளி நடை(Spacewalk), இரவு 12.30 மணிக்கு நிறைவடைந்தது.

சுமார் 6 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த விண்வெளி நடைப்பயணத்தின்போது, ​​சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் கட்டமைப்புகளில் மேம்பாட்டுப் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரும் 13-ந்தேதி மற்றும் 25-ந்தேதி ஆகிய தினங்களில் மேலும் 2 முறை விண்வெளியில் நடந்து சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.