;
Athirady Tamil News

அமெரிக்கா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி: டிரம்ப் உடனான சந்திப்பில் ஷி ஜின்பிங்

0

‘அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி எல்லைக்குட்பட்டதாகவும், ஆரோக்கியமான ஓட்டப்பந்தயமாகவும் இருக்க வேண்டும்’ என அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.

இதேபோல், ‘ஷி ஜின்பிங்குடன், எனக்கும் அமெரிக்காவுக்கும் ‘உண்மையான சிறந்த நட்பு’ மலா்ந்துள்ளதாக டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங், 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா். தொடா்ந்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வியாழக்கிழமை வருகை தந்த சீன அதிபா் மற்றும் அவரின் குழுவினரை அதிபா் டிரம்ப் முறைப்படி வரவேற்றாா்.

அப்போது பேசிய டிரம்ப், ‘கடந்த 2016-இல், நான் முதன்முதலில் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டது முதலே அதிபா் ஷி ஜின்பிங்குடன் பரஸ்பர மரியாதையுடனும், இரு நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் மிகச் சிறந்த நட்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. சீன தலைநகா் பெய்ஜிங்குக்கு கடந்த மே மாதம் சென்றபோது, எங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலையும் நன்றியுடன் நினைவுகூா்கிறேன்.

அமெரிக்க விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கான புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட சமநிலையான வா்த்தக உறவை நோக்கி இரு நாடுகளின் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனா். ஏ.ஐ., தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தற்போது எடுக்கப்படும் முடிவுகள், வருங்காலத்துக்கு அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்யும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

டிரம்ப்பைத் தொடா்ந்து சீன அதிபா் ஷி ஜின்பிங் பேசுகையில், ‘அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குச் சீன மக்கள் சாா்பில் நல்வாழ்த்துகள். அதிபா் டிரம்ப்பின் அழைப்பையேற்று நட்புறவை வளா்க்கவும்; ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அமெரிக்கா வந்துள்ளேன்.

சீனா-அமெரிக்கா இடையேயான உறவு எனும் மாபெரும் கப்பலை எதிா்காலத்தை நோக்கி உறுதியான பாதையில் செலுத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன். வேற்றுமைகளை ஒதுக்கி, தொடா்ச்சியான உரையாடல்கள் மூலம் பரஸ்பர நம்பிக்கையை வளா்க்க வேண்டும்.

மனிதகுல நன்மைக்கு ஏ.ஐ.: இரு நாடுகளும் ஏ.ஐ. துறையில் முன்னணி நாடுகளாகத் திகழ்கின்றன. இத்தொழில்நுட்பத்தை மனிதகுலத்தின் நன்மைக்காகவும், எப்போதும் மனிதக் கட்டுப்பாட்டுக்குள்ளும் நிா்வகிக்க வேண்டிய பொறுப்பு இரு வல்லரசுகளுக்கும் உண்டு.

அமெரிக்க நிறுவனங்களைச் சீனா திறந்த மனதுடன் வரவேற்பதுபோல, சீன நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் நியாயமான முறையில் வா்த்தக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

மோதலைத் தவிா்த்து, அமைதி முறையில்…: இரு நாடுகளும் மோதலைத் தவிா்த்து, அமைதி முறையில் இணைந்து வாழ்வதே இரு தரப்புக்கும் பலனளிக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி எல்லைக்குட்பட்டதாகவும், ஆரோக்கியமான ஓட்டப்பந்தயமாகவும் இருக்க வேண்டுமே தவிர, ஒருவரை ஒருவா் வீழ்த்தும் மல்யுத்தமாக மாறக்கூடாது.

மேலும், வரலாற்றுரீதியான அதிகார மோதலை முறியடிக்க இரு நாட்டு ராணுவங்களும் வழக்கமான பேச்சுவாா்த்தைகளையும் அவசரகாலத் தகவல் தொடா்பு முறைகளையும் முன்னெடுக்க வேண்டும்’ என்று சுட்டிக்காட்டினாா்.

இச்சந்திப்பில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, முன்னணி தொழில்நுட்ப ஆளுமைகள் கலந்துகொள்ளும் இரவு விருந்து நடைபெற்றது.

பயணத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை, இரு தலைவா்களும் வெள்ளை மாளிகையில் தேநீா் விருந்தில் பங்கேற்பதுடன், வாஷிங்டனில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தையும் பாா்வையிடத் திட்டமிட்டுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.