;
Athirady Tamil News

நாட்டின் அரசியலமைப்புத் திருத்தங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குப் வரலாற்றுப் பங்கு உண்டு-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்  

0
இலங்கையின் அரசியலமைப்புச் வரலாற்றில் கொண்டுவரப்பட்ட முற்போக்கான திருத்தங்களுக்குப் பின்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாரிய பங்கும் பங்களிப்பும் ஒளிந்துள்ளதாகக் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாக உருவாக்கப்பட்டுள்ள ‘சட்டத்தரணிகள் அமைப்பின்’ அறிமுக நிகழ்வும் கலந்தரையாடலும் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை மூன் வில்லேஜ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில், “இலங்கை அரசியலமைப்பு முறைமைகள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒரு அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வழியேதான் எமது கட்சியின் எழுச்சியும் வரலாறும் ஆரம்பமானது.

அதனையடுத்துக் கொண்டுவரப்பட்ட 15 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தேர்தல் வரம்பு 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டமையினால், வன்முறைப் பாதையிலிருந்து சிறுபான்மை இளைஞர்கள் விலகி அரசியல் வழியில் பிரவேசிக்க முடிந்தது. இதனாலேயே சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்தது.

அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு வழிவகுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்த பெருமை எமது கட்சியின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமையே சாரும். இவ்வாறு 13, 15, 17 போன்ற ஒற்றைப்படை எண்களைக் கொண்ட திருத்தங்கள் அனைத்தும் நாட்டுக்கு நன்மையளித்த முற்போக்கான திருத்தங்களாகும்” எனச் சுட்டிக்காட்டினார்.

“இன்று நீதிமன்றங்களில் எமது இளம் முஸ்லிம் சட்டத்தரணிகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மிகத் திறமையாக வாதாடுவதைக் கண்டு பெருமையடைகின்றேன். தொழில்முறைத் தேவ கருதி சட்டத்தரணிகள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.

சமூகம் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், உயர் நீதிமன்றம் வரை சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ள இச் சட்டத்தரணிகள் அமைப்பு காலத்தின் மிக முக்கியமான தேவையாகும்” என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷாரப், கட்சி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் பெருந்திரளான சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.