;
Athirady Tamil News

இந்தியா – இந்தோனேசியா கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி ‘கருடா சக்தி’ தொடங்கியது

0

ஜகார்த்தா,

இந்தியா – இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளின் கூட்டு சிறப்புப் படைகள் பங்கேற்கும் ‘கருடா சக்தி’ ராணுவ பயிற்சியின் 11-வது பதிப்பு இந்தோனேசியாவின் பேன்யூவாங்கி பகுதியில் நேற்று தொடங்கியது. இப்பயிற்சி அடுத்த மாதம் (நவம்பர்) 6-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

பாராசூட் படைப்பிரிவு களம் இறக்கம்

நாட்டின் எல்லை பாதுகாப்பை உறுதி செய்யவும், இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்தவும் இந்த சிறப்பு கூட்டுப் பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சியில், இந்திய ராணுவத்தின் சார்பில் அதிவீரர்களை கொண்ட புகழ்பெற்ற ‘பாராசூட் படைப் பிரிவின்’ (Special Forces) வீரர்களும், இந்தோனேசிய நாட்டின் சிறப்பு படை வீரர்களும் களம் இறங்கியுள்ளனர்.

வனப்பகுதியில் தீவிர பயிற்சி

இரு நாட்டு படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு திறனை அதிகரிப்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, அடர்ந்த வனப்பகுதிகளில் எதிரிகளை எதிர்கொள்வது மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இதில் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

நவீன ரக துப்பாக்கிகள்

அதன்படி, காடுகளில் உள்ள தடைகளை தாண்டி செல்லுதல், நவீன ரக துப்பாக்கிகளால் இலக்குகளை துல்லியமாக சுடுதல், செங்குத்தான மலைகளில் ஏறுதல் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக வான்வழியாக இறங்கி தாக்குதல் நடத்துதல் போன்ற கடினமான உத்திகளில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு உறவு பலப்படும்

இதுமட்டுமின்றி, அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை கையாளுதல், போர் உத்திகள் மற்றும் நிபுணத்துவ தகவல்களை இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள உள்ளனர்.

கருடா சக்தி

இரு நாட்டு படைகளின் கூட்டு ஒருங்கிணைப்பை சோதிக்கும் இறுதி மதிப்பீட்டு பயிற்சியுடன் இந்த ‘கருடா சக்தி’ நிறைவடையும். இப்பயிற்சியின் மூலம் இந்தியா – இந்தோனேசியா இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டும் என ராணுவ உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.