;
Athirady Tamil News

கோழி இறைச்சி விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்-மீறினால் சட்ட நடவடிக்கை

0

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை நாளை முதல் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் அறிவித்துள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற போதே இத் தீர்மானம் எட்டப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு அமைவாக, கோழி இறைச்சியின் சில்லறை விலை தொடர்பான விடயங்கள் இக் கலந்துரையாடலில் முதன்மையாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஆராயப்பட்டன.

அத்துடன், தற்போதைய பொருளாதாரச் சூழலில் கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இக் கலந்துரையாடலின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்துக் கோழி இறைச்சிக் கடைகளிலும் நாளை (29.10.2026) வியாழக்கிழமை முதல் ஒரு கிலோகிராம் (1 Kg) கோழி இறைச்சியின் விலையைப் பொதுமக்களுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்துவது (Price Tag Display) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விலையைக் காட்சிப்படுத்தத் தவறும் கடைகள் மீது கடுமையான பரிசீலனைகள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், அவர்களின் கடை அனுமதிப்பத்திரம் (Trade License) தொடர்பில் பிரதேச சபையினால் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இதன்போது தவிசாளரினால் எச்சரிக்கப்பட்டது.

இக் விசேட கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர், சம்பந்தப்பட்ட பாட உத்தியோகத்தர்கள் மற்றும் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.