;
Athirady Tamil News

45 நாட்களாக போக்குக் காட்டிய செம்மறி ஆடு: சுருக்கு கயிறு வீசிப் பிடித்த 13 வயது சிறுமி!

0

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் சுமார் ஒன்றரை மாதங்களாகப் பிடிபடாமல் சுற்றித்திரிந்த செம்மறி ஆட்டை, 13 வயது சிறுமி ஒருவர் சாகசமான முறையில் மீட்டுள்ளார்.

45 நாட்கள் தப்பி ஓடிய ஆடு

அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாநிலத்தின் வாட்ஸ்வொர்த் பகுதியில், ‘பார்படாஸ் பிளாக்-பெல்லிட்’ வகையைச் சேர்ந்த செம்மறி ஆடு ஒன்று கடந்த 45 நாட்களாக தப்பித்து சுற்றித்திரிந்தது. சாதாரண வேலிகளை எளிதில் தாண்டிச் செல்லும் திறன் கொண்ட இந்த ஆட்டைப் பிடிக்க உள்ளூர் போலீசாரும், விலங்குகள் மீட்புக் குழுவினரும் தீவிரமாக முயன்றனர்.

ட்ரோன் உதவியுடன் கண்காணிப்பு

பல நாட்கள் தேடியும் ஆடு சிக்காததால், அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆடு இருக்கும் இடம் துல்லியமாகக் கண்டறியப்பட்ட நிலையில், அதனைப் பத்திரமாகப் பிடிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

குதிரையில் சென்று சாகச மீட்பு

இதனைத் தொடர்ந்து, கடந்த (புதன்கிழமை) லிட்ச்பீல்டைச் சேர்ந்த ரீகன் க்ரம்ப்ளர் (வயது 13) என்ற சிறுமி களத்தில் இறங்கினார். தனது 18 வயது குதிரையான ‘கேடலினா’ மீது ஏறி ஆட்டை துரத்திச் சென்ற அவர், லாவகமாகக் கயிறு வீசி அந்த ஆட்டைப் பிடித்தார்.

சரணாலயத்தில் பாதுகாப்பு

மீட்கப்பட்ட செம்மறி ஆட்டிற்கு, அதனைப் பிடித்த சிறுமியின் நினைவாக ‘ஜெர்ரி ரீகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஆடு விஸ்பரிங் ஏக்கர்ஸ் பண்ணை விலங்குகள் சரணாலயத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் இந்த துணிகரச் செயலை அப்பகுதி மக்களும் விலங்கு நல ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.