;
Athirady Tamil News

நற்பண்புகள் கொண்ட எதிர்காலத் தலைமுறையை உருவாக்கவே புதிய கல்விக் கொள்கை – ஆளுநர் வேதநாயகன்!

0
மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவப் பண்புகளும் நற்பண்புகளும் கொண்ட எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்காகவே தற்போதைய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது  என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பொன்விழா (1976 – 2026) நிகழ்வு, பாடசாலை அதிபர் யோகராசா தயாளன் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் மண்டபத்தில்  நடைபெற்றது.

பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,

1976ஆம் ஆண்டு நகரின் புறநகர்ப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, கடந்த ஐந்து தசாப்தங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களின் அர்ப்பணிப்பால், இன்று நகர்ப்புறத்திலுள்ள முன்னணி ஆரம்பப் பாடசாலைகளுக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவப் பண்புகளும் நற்பண்புகளும் கொண்ட எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்காகவே தற்போதைய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவர்கள் நன்றாகப் படித்துப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், சக மாணவர்களுக்கு உதவுதல், உண்மையைப் பேசுதல், தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மற்றவர்களின் கருத்துகளை மதித்தல் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இப்பொன்விழா நிகழ்வில் பொன்விழா சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, பாடசாலையின் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும், மாணவர்களின் கோலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் சிறுவர் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.