;
Athirady Tamil News

சிறுவர்களையும் இளைஞர்களையும் புகைப்பழக்கத்திலிருந்து மீட்போம்! : இன்று உலக புகைத்தல் தடுப்பு தினம்!

0

“புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளிலிருந்து எமது பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்வோம்” என்பது இவ்வருடத்தின் உலக புகைத்தல் தடுப்பு தினத்தின் தொனிப்பொருளாகும். புகைத்தல் பாவனையினால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணமடைவதுடன் வருடாந்தம் சுமார் 20,000 இலங்கையர்கள் அகால மரணத்தைத் தழுவுகின்றனர். புகையிலை நிறுவனம் தினமும் இழக்கும் வாடிக்கையாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களையே முதன்மையாக இலக்கு வைக்கின்றனர்.

சர்வதேச ரீதியாக புகைத்தல் பாவனையினால் வருடாந்தம் 08 மில்லியன் (எண்பது இலட்சம்) மக்கள் அகால மரணமடைவதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இவர்களில் 100,000 பேர் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதால் அதாவது இரண்டாம் நிலை புகைத்தலினால் தங்கள் உயிரை இழக்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் இத்தகைய பயங்கரமான அபாயகரமான மனித இழப்புக்களுக்கு உள்நாட்டுப் போர்களோ அல்லது வேறு எந்த காரணமோ பங்களிக்கவில்லை என்பது திண்ணம்.

எனவே, அனைத்து வகையான புகையிலை பொருட்களின் பாவனையானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இலாபகரமானது அல்லரூபவ் மாறாக வல்லரசு நாடுகளுக்கு மாத்திரமே இலாபகரமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்கும், புகையிலை பாவனையிலிருந்து பூகோளத்தை விடுதலை செய்வதற்காகவும் உலக சுகாதார நிறுவனம், 2003இல் புகையிலை பாவனையை தடுப்பதற்கான கொள்கை கட்டமைப்பை (WHO Framework Convention on Tobacco Control – FCTC)) அறிமுகப்படுத்தியது.

மேலும், உலகின் 183 நாடுகள் இதில் இணைந்துள்ளதோடு இலங்கை 2003ஆம் ஆண்டு இக்கொள்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

புகையிலை நிறுவனம் மற்றும் புகையிலை சார் உற்பத்தி நிறுவனங்கள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்குவைத்து பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடிப்படையாக வைத்து, இவ்வருடத்தின் புகைத்தல் தடுப்பு தினத்தை மையமாகக் கொண்டு, புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

சிறு வயதிலிருந்தே பிள்ளைகளின் மனதில் புகைப்பிடித்தல் தொடர்பான நேர்மறையான எண்ணத்தை விதைத்து, அவர்களை சிகரெட் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்காக பல்வேறு மட்டங்களிலும் விளம்பரங்களை மேற்கொண்டு வருகிறது.

புகையிலை நிறுவனமானது அவ்வகையான விளம்பரங்களுக்காக வருடாந்தம் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை சிகரட் பாவனைக்கு ஈர்த்துக்கொள்வதற்காக பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் முன்னெடுத்துவரும் விளம்பர தந்திரோபாயங்கள் சில…

1. சமூக ஊடக வலையமைப்புகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி மூலம் சிகரட் பயன்பாட்டை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கவர்ச்சிகரமானதாக மாற்றுதல்.

2. சமூக ஊடகங்கள் (Facebook, Instagram, YouTube) மூலம் புகையிலை நிறுவனத்தினால் ஊதியம் பெறுகின்ற சமூக ஆர்வலர்களை (Influencers) பயன்படுத்தி இளைஞர்களிடம் செல்வாக்கு செலுத்துதல்.

3. சிகரட் பாவனைக்கான கவர்ச்சி இளைஞர்கள் மத்தியில் குறைவடைந்து வருவதால், நஷ்டமடைந்து வரும் சந்தையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இலத்திரனியல் சிகரெட்டை அறிமுகப்படுத்துதல்.

4. வெவ்வேறு (Brand) பெயர்கள் மற்றும் சுவைகளை பயன்படுத்தி சிகரெட் பயன்பாட்டை ஊக்குவித்தல்.

5. குறைந்த விலையில் சிகரட்டுகளை அறிமுகப்படுத்தி விலையை அதிகரிக்காமல் பராமரித்தல்.

6. இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் சிகரட் விளம்பரங்கள், பொதிகள், “வயது குறைந்தவர்களுக்கான விற்பனை தடை போன்ற விளம்பரங்கள் மூலம் சிகரட் பற்றிய ஆர்வத்தை உருவாக்குதல்.

7. பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக சிகரட் பாவனையை ஊக்குவித்தல்.

8. “அபிஷேகம்” எனும் விஷேட வியாபார நாமத்தை விற்பனையாளர்களுக்கு வழங்கி அதனூடாக விற்பனையாளர்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்குவதன் ஊடாக சிகரட் விற்பனையை ஊக்குவிப்பதற்கு முயற்சி செய்தல்.

தற்போது சிகரட் பாவனையிலிருந்து விடுதலையாகி வரும் எமது நாட்டின் இளைஞர்களை மீண்டும் சிகரட் பாவனைக்குள் ஈர்த்துக்கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இலத்திரனியல் சிகரட்டுகள் என்பது புகையிலை நிறுவனத்தின் மற்றொரு தந்திரோபாயமாகும்.

இது புகைப்பிடிப்பதை விட குறைவான தீங்கு விளைவிக்கும் மற்றும் குறைவான ஆபத்தானது என்று மக்களை நம்ப வைக்க பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது.

புகையிலை நிறுவனமானது பெரும்பாலும் இலத்திரனியல் சிகரட்டுக்கள் “ஆபத்து குறைந்தவை”, “புகை இல்லாத பொருள்”, “சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது”, “நாகரிகமானது”, “நுகர்வோருக்கேற்ற உற்பத்தி பொருள்” என பல வகைளிலும் விளம்பரங்களை மேற்கொள்கின்றனர். ஆரோக்கியமான மாற்று வழி என்ற போர்வையில் புதிய வாடிக்கையாளர்களைப் ஈர்த்துக்கொள்வதற்கான தந்திரோபாயங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் புகையிலை நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு சந்தேகத்திற்கு இடமின்றி தீங்கு விளைவிக்கும் இரசாயனமான நிக்கொட்டின் தயாரிப்புகளைப் பயன்படுத்தத் தூண்டுவதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் தயாரிப்புகளின் நுகர்வோர்களாக மாற்ற முயற்சிக்கின்றன.

சிகரட் வடிகட்டிகள், பல்வேறு சுவைகள் மற்றும் நறுமணங்களைக் கொண்ட புகையிலை பொருட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இளைஞர்களையும் சிறுவர்களையும் சிகரட்டை பயன்படுத்துவதற்கு தூண்டும் வகையில் சட்டவிரோதமான மற்றும் நெறிமுறையற்ற தந்திரோபாயங்களை புகையிலை நிறுவனம் மேற்கொள்கிறது.

இவ்வாறானதொரு பின்னணி இருந்தும் இலங்கையில் சிகரட் பாவனை பாரியளவில் குறைந்துள்ளது.

GATS கணக்கெடுப்பின்படி (Global adult tobacco), இலங்கையில் சிகரட் பாவனை 9.1 வரை குறைந்துள்ளது. உலகில் சிகரட் பாவனை குறைந்துவரும் நாடுகளில் இலங்கையின் நிலை சிறந்த நிலையில் காணப்பட்ட போதிலும், இன்னமும் எமது நாட்டில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரட்டை பயன்படுத்துகின்றனர்.

சிகரட் பாவனையானது பாதகமான விளைவை ஏற்படுத்தும் அதே சந்தர்ப்பத்தில் நாட்டின் சுகாதார பிரச்சினைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், சிகரட், புகைத்தல் காரணமாக காற்று, நீர், நிலம் மாசுபடுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் நடாத்திய Global Youth Tobacco Survey – GYTS கணக்கெடுப்பு மற்றும் தேசிய ஆய்வுகளின்படி, இளைஞர்களிடையே புகையிலை பயன்பாடு சடுதியாக குறைந்து வருகிறது. புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த வருடம் சிகரட் உற்பத்தி 19% வீதத்தால் குறைந்துள்ளது.

சிகரட் பயன்படுத்துபவர்களும் புகைப்பிடிப்பதை நிறுத்தும் சுய முயற்சியில் ஈடுபடுவது ஒரு சிறந்த நிலையாகும்.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புகையிலை நிறுவனங்களின் அநாகரிக தந்திரோபாயங்களுக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வு உருவாகி வருகின்றமையுடன் இளைஞர்களை புகைத்தலிற்கு ஈர்ப்பதானது புகையிலை நிறுவனங்களின் தந்திரமான செயல் என்ற புரிதலும், புகைத்தல் என்பது பலனற்ற முட்டாள்தனமான செயல் என்ற புரிதலும் உருவாகி வருகிறது.

இந்நிலைமையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை புகைப்பொருள் பாவனைக்கு ஈர்த்துக்கொள்ளும் வீதத்தை குறைத்துக்கொள்வதற்காக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் பின்வரும் ஆலோசனைகளை வழங்குகிறது.

1. தனி சிகரட் விற்பனையை தடை செய்தல்

2. தற்போது தடை செய்யப்பட்டுள்ள, எனினும் சந்தையில் காணப்படுகின்ற அனைத்து இலத்திரனியல் சிகரட்டுக்களையும் கைப்பற்றி கைது செய்தல் மற்றும் விற்பனையாளருக்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

3. கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீற்றருக்கு இடையில் புகைப்பொருள் விற்பனையை தடை செய்தல்

4. சிகரட்டுக்கு விஞ்ஞான ரீதியான விலை சுட்டெண்ணை அறிமுகப்படுத்தல்

5. வெற்றுப் பொதியிடல் முறைமையை அறிமுகப்படுத்தல் (Plain Packaging)

6. பாடசாலை சூழலில் பிள்ளைகளை புகைத்தல் பாவனைக்கு ஈர்த்தெடுப்பதற்கு புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை மேற்கொள்ளல்

7. இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை தடுத்தல்

8. மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளல்

9. மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டம் மீறப்படுமிடத்து அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

10. இலங்கையில் பிளாஸ்டிக்கை ஒருமுறை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சிகரட் வடிகட்டிகளை தடை செய்தல். (சிகரட் வடிகட்டிகள் சுற்றுச்சூழலுக்கு 7,000க்கும் மேற்பட்ட இரசாயனங்களை வெளியிடுகின்றன மற்றும் இலங்கையில் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் சிகரட் வடிகட்டிகள் சூழலில் கலப்பதுடன், வருடத்துக்கு 2300 மில்லியன் சிகரட் வடிகட்டிகள் சூழலில் கலக்கின்றன)

எமது நாட்டின் சிறுவர்களையும் இளைஞர்களையும் வாடிக்கையாளர்களாக்கி எமது நாட்டின் வளங்களை நோயாளிகளாக்கி, பன்னாட்டு புகையிலை நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்க விடாமல் சிகரட் பாவனைக்கு பழகுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளிலிருந்து எமது நாட்டின் சிறுவர்களையும் இளைஞர்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பன்னாட்டு புகையிலை நிறுவனங்களின் தந்திரோபாயங்களை அம்பலப்படுத்துவதன் மூலமும் புகைப்பொருட்களின் பாதகமான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்து எமது நாட்டின் சிறுவர்களையும் இளைஞர்களையும் வலுப்படுத்த வேண்டும். அவர்களின் தயாரிப்புகளின் தீங்கு மற்றும் பயனற்ற தன்மையை பற்றிய அவர்களின் புரிதலை மேம்படுத்துவதன் மூலமும் நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அதிகாரம் அளிக்க வேண்டும். இன, மத, கட்சி பேதமின்றி எமது பிள்ளைகளையும் இளைஞர்களையும் தொடர்ந்து சிகரட் பாவனைக்கு ஈர்த்தெடுக்கும் முகவர்களை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.