36 வருட கால கண்ணீரும் காத்திருப்பும் !
அதன் அடிப்படையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில், இலங்கை இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட விசேட குழுவினர்கள் கடந்த திங்கட்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்தனர். அங்கு தனியார் மற்றும் அரச காணிகளில் காணப்படும் பாதுகாப்பு தரப்பினரின் முகாம்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, விடுவிக்கக் கூடிய காணிகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
தொடர்ந்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு தரப்பினரின் முகாம்களுக்குச் சென்று காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய்ந்தனர்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கு பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 2000 ஏக்கருக்கு அதிகமான காணிகளைப் பாதுகாப்பு தரப்பினர் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக தம் வசம் கையகப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றினை மீள மக்களிடம் கையளிப்பது தொடர்பில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ
யாழ். மாவட்ட செயலர், ம. பிரதீபன்,
யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
வடக்கில் காணி விடுவிப்புக்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கீரிமலையில் இருந்து காங்கேசன்துறை துறைமுக பகுதி வரையிலான சுமார் 3 கிலோ மீற்றர் தூரமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகிறது. வசாவிளான் பகுதியில் இருந்து தெல்லிப்பழை வரையிலான சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகிறது.
கள ஆய்வினைத் தொடர்ந்து, காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. காணி விடுவிப்புக்கள் தொடர்பில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
வலி. வடக்கில் விடுவிக்க வேண்டிய காணிகள் தொடர்பிலான துல்லியமான தரவுகள் இன்றியும், அமைவிடங்கள் பற்றிய போதிய விளக்கம் இல்லாத நிலையிலும் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து காணிகளை விடுவிக்க அழுத்தமாக கோரிக்கையை முன் வைக்க முடியாது அதிகாரிகள் தடுமாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம், வரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டு இடங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் விடுக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலையின் ஒரு பகுதி இன்னமும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. அதனை விடுவிக்குமாறு நீண்ட காலமாகப் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இரண்டு இந்து மயானங்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர்.
மயிலிட்டி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகளின் சொகுசு தங்குமிடமான “கொமாண்டோ பங்களா” அமைந்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் குறித்த பங்களாவினால், அப்பகுதிகளில் கடற்தொழில் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் அதனால் தமது வாழ்வாதாரமும் அழிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குரல் எழுப்புகின்றனர். எனவே, அப்பகுதியை விடுவித்து காணிகளை கையளிக்க வேண்டும் என்பதுடன், சுதந்திரமாகத் தொழில் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறித்த வீதி மூடப்பட்டுள்ளமையால், வடமராட்சி, மயிலிட்டி, காங்கேசன்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம், கீரிமலை தீர்த்தக் கேணி ஆகியவற்றுக்குச் செல்வதற்கு, மாவிட்டபுரம் சென்றே அங்கிருந்து செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகிறது. குறித்த வீதியினை திறந்து விடுவதன் மூலம் மக்களுக்கு இலகுவில் கீரிமலை செல்ல முடியும்.
இதனால் வடமராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
தமது சொந்த வாகனங்களில் வருவோர், 2 கிலோ மீற்றர் வீதி வீதி மூடப்பட்டுள்ளமையால் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
பொதுப் போக்குவரத்தான பேருந்தில் பயணிப்போர் யாழ். நகர் பகுதிக்குச் சென்று, மீண்டும் தெல்லிப்பழைக்குப் பேருந்தில் செல்ல வேண்டும். இதனால் சுமார் 35- – 40 கிலோ மீற்றர் தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
இதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்ற போதிலும், அது தொடர்பிலும் அழுத்தமான கோரிக்கைகளைக் கலந்துரையாடலில் முன் வைக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்நிலையிலையே, பலாலி வீதியில் உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் செல்லும் வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதியைக் கடந்த ஆண்டு முதல், நேரக் கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்துள்ளனர்.
அதனை நீக்கி 24 மணி நேரம் பயணிக்கக் கூடியவாறு முழுமையாக வீதியினைத் திறந்து விட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இராணுவத் தரப்பினரிடம் கோரிக்கையை முன் வைத்தார். முதலில் அதற்கு இராணுவத்தினர் சம்மதிக்காத நிலையில், அவர் அழுத்தமாகக் கோரிக்கை விடுத்ததைத் அடுத்து, பாதையை ஒரு மணி நேரம் மேலதிகமாகத் திறக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்தனர்.
இதுவரை காலமும், காலை 06 மணி முதல் இரவு 07 மணி வரையில் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட வீதி, தற்போது ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டு, இரவு 08 மணி வரையில் போக்குவரத்துச் செய்ய இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் கள ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, ஜனாதிபதி தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபையிலும், பாராளுமன்றப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்படும் என்று பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, 36 வருடங்களாகத் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தலைமுறைகள் கடந்து காத்திருக்கும் காணி உரிமையாளர்கள், தமக்கு மிக விரைவில் நல்ல செய்திகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.