;
Athirady Tamil News

அரச வளங்களும் மக்கள் பணமும்

0
இலங்கை பாராளுமன்றத்தின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது கூட்டத்தொடர்கள் தொடர்பாக அண்மையில் வெளிவந்துள்ள கணக்காய்வு அறிக்கைகள், நாட்டின் அரசியல் வரலாற்றில் அதிகார வர்க்கத்தின் கறைபடிந்த பக்கங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. பொருளாதார நெருக்கடியினாலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினாலும் ஒட்டுமொத்த தேசமும் ஸ்தம்பித்து நின்ற காலகட்டத்தில், அரச இயந்திரத்தின் உயர்மட்டத்தில் நிலவிய கட்டுப்பாடற்ற சலுகைக் கலாசாரத்தையும், மக்கள் சொத்துக்கள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டன என்பதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

2022ஆம் ஆண்டு என்பது இலங்கையர் எவராலும் மறக்க முடியாத ஒரு நரக காலமாகும். ஒரு லீட்டர் பெட்ரோலுக்காகவும், ஒரு சிலிண்டர் எரிவாயுவுக்காகவும், அத்தியாவசிய மருந்துகளுக்காகவும் நாட்டின் சாமானிய மக்கள் இரவென்றும் பகலென்றும் பாராமல் மைல் கணக்கில் வரிசையில் நின்றார்கள். பல மணிநேரக் காத்திருப்புக்குப் பின்னர், எரிபொருள் வரிசைகளிலேயே மனித உயிர்கள் மடிந்து விழுந்த கொடூரங்களும் பதிவாகின. அந்த மனிதத் துயரத்தின் பின்னணியில்தான் அன்றைய ராஜபக்ஷ -− விக்கிரமசிங்க ஆட்சியின் அதிகார அரசியல் தொடர்ந்தது.

சாத்வீகமான மக்கள் போராட்டத்தின் மூலம் ஊழல்மிக்க குடும்ப ஆட்சி விரட்டியடிக்கப்பட்ட பின்னரும்கூட, ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பின் கீழ் அரச வளங்கள் எந்தளவுக்கு சலுகைகளுக்காக பயன்படுத்தப்பட்டன என்பதற்கு இந்தக் கணக்காய்வு அறிக்கைகள் சான்றாகின்றன.

முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் எரிபொருள் பயன்பாடு இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். கணக்காய்வு அறிக்கைகளின்படி, முன்னாள் சபாநாயகருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஐந்து வாகனங்களுக்கு 2023ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கு 3,994 லீட்டர் எரிபொருளும், 2024ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கு 6,122 லீட்டர் எரிபொருளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் மாதத்திற்கு 2,400 லீட்டர் எரிபொருள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 6,122 லீட்டராக அதிகரித்துள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 155 சதவீத அதிகரிப்பாகும். நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து மக்கள் எரிபொருள் வரிசைகளில் துன்புற்றுக் கொண்டிருந்த காலத்தில்கூட, இவ்வளவு அளவிலான எரிபொருள் பயன்பாடு இடம்பெற்றிருப்பது அரச சலுகைக் கலாசாரத்தின் அளவை வெளிப்படுத்துகிறது. அத்துடன், அவரது 45 பேரைக் கொண்ட பெரும் பணியாளர் குழுவும் மக்கள் பணத்திலேயே பராமரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலை சபாநாயகருடன் மட்டும் நின்றுவிடவில்லை. அன்றைய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு அதிகாரபூர்வமாக மூன்று வாகனங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும், அவரது தனிப்பட்ட வாகனமொன்றுக்காக மட்டும் 8,545,037 ரூபா பெறப்பட்டதுடன், 21,299 லீட்டர் எரிபொருள் மேலதிகமாகப் பெறப்பட்டுள்ளதாக கணக்காய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் ஒரு துளி எரிபொருளுக்காக அல்லாடியபோது, அதிகார வர்க்கம் மக்கள் பணத்தில் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தது என்பதையே இத்தகைய புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இதற்கிடையில், தற்போதைய சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன மீது உதய கம்மன்பில மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் பதவி தொடர்பில் சர்ச்சைக்குள்ளான சமிந்த குமார குலரத்ன ஆகியோரால் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான அரசியல் உண்மை ஒன்று உள்ளது. சமிந்த குமார குலரத்னவை பிரதி செயலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுக் குழுவிற்கு தலைமை தாங்கியவரே முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனதான் என்பதாகும்.

தமது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று புதிய நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பழைய அதிகார வர்க்கத்தின் அரசியல் வங்குரோத்துத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.

அன்றைய ஆட்சியாளர்கள் தங்களது நிர்வாகத் தோல்விகளையும் தவறான கொள்கைகளையும் மறைப்பதற்காக, நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெளிப்புற காரணிகளுடன் மட்டும் இணைத்து மக்களுக்கு விளக்க முற்பட்டனர்.

ஆனால் 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பேரழிவு வெறுமனே சர்வதேச சூழ்நிலையின் விளைவு அல்ல. முறையற்ற நிதிக் கொள்கைகள், வரி வருவாய் வீழ்ச்சி, ஊழல், தவறான நிர்வாகத் தீர்மானங்கள் மற்றும் விவசாயத் துறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர்க் கொள்கை மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணிகள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தன.

அந்நிய செலாவணி கையிருப்பு தீர்ந்ததால் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குக்கூட நாடு நிதியின்றி தவித்தது. எரிபொருள் கப்பல்கள் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்தபோதிலும், அவற்றை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நிதியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இன்றைய உலகச் சூழல் வேறுபட்டது. வளைகுடா பிராந்தியத்தின் போர்ப் பதற்றங்கள், சர்வதேச சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் சவால்கள் உள்ளிட்ட வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியிலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களை கைவிடாமல் நிர்வாகத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில் தற்போதைய சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்னவின் அணுகுமுறை குறிப்பிடத்தக்கதாகிறது. முன்னைய சபாநாயகர் பதவியில் காணப்பட்ட சலுகை முறைகளுக்கு மாறாக, தற்போதைய சபாநாயகர் தனது எரிபொருள் பயன்பாட்டை அமைச்சரொருவருக்கு வழங்கப்படும் 900 லீட்டருக்குள் மட்டுப்படுத்தியுள்ளார்.

அத்துடன், பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி குழுக்களின் தலைவருக்கான எரிபொருள் பயன்பாட்டையும் வரையறுத்துள்ளார். மேலும், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தனக்குக் கிடைக்க வேண்டிய தனியான எரிபொருள் கொடுப்பனவைப் பெறாமல், சபாநாயகர் பதவிக்குரிய எரிபொருள் கொடுப்பனவை மட்டுமே பெற்றுக்கொள்கிறார்.

அதேபோன்று, பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கான எரிபொருள் வசதியையும் அமைச்சுச் செயலாளருக்குரிய அளவுக்கு மட்டுப்படுத்தியுள்ளார். இதன் மூலம் உயர்பதவி என்பது எல்லையற்ற சலுகைகளை அனுபவிப்பதற்கான உரிமை அல்ல என்பதைக் காட்டும் நிர்வாக அணுகுமுறை வெளிப்படுகிறது.

முன்னாள் சபாநாயகருக்காக ஐந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போதைய சபாநாயகர் தனக்காக ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தியுள்ளார்.

சபாநாயகரின் பணியாளர்கள் தொடர்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகரின் கீழ் 45 பேர் வரை பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போதைய சபாநாயகர் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 20 ஆக மட்டுப்படுத்தியுள்ளார்.

அரச செலவைக் குறைப்பது என்பது சம்பளங்களைக் குறைப்பது மட்டுமல்ல. தேவையற்ற பதவிகள், அவசியமற்ற வசதிகள் மற்றும் மேலதிக நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதும் அதில் அடங்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு முக்கியமானது. ஒரு தனிநபரின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காகப் பேணப்படும் உத்தியோகபூர்வ இல்லத்துக்குப் பதிலாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரையிலான மக்கள் பிரதிநிதிகளின் பயிற்சி, கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பாராளுமன்றக் கல்வி மற்றும் ஆய்வு மையமாக அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒருவரின் தனிப்பட்ட சலுகையாகப் பயன்படுத்தப்படும் அரச வளம், மக்கள் பிரதிநிதிகளின் அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கான பொது வளமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சபாநாயகர் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சாதாரண உத்தியோகபூர்வ இல்லமொன்றில் வசித்து வருவதுடன், அதன் மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் மற்றும் வீட்டு வாடகையைத் தனது சொந்தச் சம்பளத்திலிருந்து செலுத்தி வருகிறார்.

அரசியலில் உண்மையான மாற்றம் என்பது மேடைகளில் பேசப்படும் வெற்று வார்த்தைகளால் அல்ல, மக்கள் பணத்தையும் அரச வளங்களையும் எவ்வாறு கையாள்கிறோம் என்பதிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு புறம், நாட்டின் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்று துன்புற்ற காலத்திலும் அரச வளங்களை விரிவான சலுகைகளுக்குப் பயன்படுத்திய அதிகார வர்க்கத்தின் நடைமுறை இருக்கிறது. மறுபுறம், தமக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகளைக்கூட மட்டுப்படுத்தி, வாகனங்களையும் பணியாளர்களையும் குறைத்து, அரச செலவுகளை கட்டுப்படுத்தி, தனிப்பட்ட பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட வளங்களை பொது பயன்பாட்டுக்கு மாற்றும் புதிய அணுகுமுறை உள்ளது. இந்த இரு அணுகுமுறைகளுக்கும் இடையிலான வேறுபாடு வெறும் நிர்வாக மாற்றமல்ல. இது அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது.

ஒரு லீட்டர் எரிபொருளைக்கூட தங்களது சொந்தச் சொத்தாகக் கருதி பயன்படுத்திய பழைய சலுகைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் அரச செலவுகளைக் குறைத்து மக்கள் பணத்தைப் பாதுகாக்கும் புதிய பொறுப்புக்கூறல் யுகம் இலங்கையில் உருவாகி வருவதை இந்த ஒப்பீடு வெளிப்படுத்துகிறது.

இறுதியில், மக்கள் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான். அரச வளங்கள் ஆட்சியாளர்களின் சலுகைகளுக்காகவா பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது அவை மக்களின் நலனுக்காகவா பயன்படுத்தப்பட வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலே பழைய அரசியல் கலாசாரத்துக்கும் புதிய அரசியல் கலாசாரத்துக்கும் இடையிலான உண்மையான வேறுபாட்டை தீர்மானிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.