;
Athirady Tamil News

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றோம்: முன்னாள் போராளி!!

0

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றோம் என முன்னாள் போராளியான செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்ததாவது,

இவ்வருடம் இடம்பெற்ற மாவீரர் தினத்தில் வாழை மரத்தில் விளக்கேற்றியது குறித்து நேற்று முன்தினம் (4) மூன்றரை மணிநேரம் கொழும்பில் இடம்பெற்ற விசாரணைகளின் போது பயங்கரவாத பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி தெரிவித்துள்ளார்.

வாழை மரத்தில் ஏன் விளக்கு ஏற்றுகின்றீர்கள் என்று தொடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அது எமது பாரம்பரிய கலாச்சாரத்தின் முறைமை என்றும் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்றோம்.

மாறாக விடுதலை புலிகளின் தடை செய்யப்பட்ட கொடி போன்ற பொருட்களை எதனையும் நாங்கள் எங்கும் காட்சிப்படுத்தி நினைவு கூரவில்லை .

எமது உறவுகளை நினைவு கூருவதற்கு எமக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு வரையும் சென்று பல்வேறு அரச தரப்பு பிரதிநிதிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வலியுறுத்தியிருந்தோம்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றி எனது சாட்சியத்தை வழங்கியிருந்தேன். அதற்குப்பின்னர் எம்மை அச்சுறுத்தும் செயற்பாடாகவும், என்னை பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டதாகவுமே இதனைக் கருதுகிறேன்.

இவ்வாறான விசாரணைகள் முன்னாள் போராளிகள், தமிழ் மக்கள் மீது சுமத்தப்படும்போது நாட்டைவிட்டு வெளியேறக்கூடிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டினால் எமது நாட்டிற்கும் எமது ஜனநாயகத்திற்குமான எமது குரல்கள் வாய்களை மூடக்கூடிய ஒரு விடங்களை இவர்கள் கையாள்கின்றார்கள் அத்துடன் பயங்கரவாத பிரிவினருக்காக நாங்கள் சில குற்றங்களை ஏற்றுக்கொண்டு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

மக்களின் வெளிப்பாடாகவே நாங்கள் இந்த நினைவேந்தல்களை மேற்கொண்டு வருகின்றோம் என்பதையும் எனது விசாரணையின் போது பதிவு செய்திருந்தேன் என்று மேலும் தெரிவித்துள்ளார் .

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.