;
Athirady Tamil News

விகாரைகளில் கொள்ளையடித்த கணவன் மனைவி!

0

புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்ற சந்தேகத்தின் பெயரில் அநுராதபுத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த தம்பதியினர் ஆண்டியாகம பகுதியில் வைத்து நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் உடுபந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணும், 22 வயதுடைய இளைஞனும் திருமணம் முடித்த தம்பதியினர் எனக் கூறப்படுகிறது.

இந்த தம்பியினர், பௌத்த விகாரைகளுக்குச் சென்று அங்கு கடமைபுரியும் பௌத்த மதகுரு மற்றும் பௌத்த விகாரையில் உபகாரம் புரியும் மதகுருக்களை இலக்கு வைத்து அவர்களுடன் நெருக்கமாக கலந்துரையடியே கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையிடும் நோக்கில் வருகை தரும் கணவனும், மனைவியும் விகாரைகளுக்கு சென்றதும், கொள்ளையர்களில் ஒருவரான மனைவி குறித்த விகாரைகளில் உபகாரம் புரியும் மதகுருமார்களை அணுகி பேச்சைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது கணவனான 22 வயதுடைய இளைஞன் பிரதம பௌத்த மதகுரு தங்கியிருக்கும் அறைகளுக்குள் புகுந்து பணம், தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை இவ்வாறு திருடுவதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேபோன்றதொரு பாணியிலேயே சந்தேக நபர்களான கணவனும், மனைவியும் புத்தளம் – பல்லம நந்திமித்ர ரஜமஹா விகாரைக்குள் நுழைந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை திருடியுள்ளதாக பல்லம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஸ்ரீவர்தன தெரிவித்தார்.

பௌத்த விகாரைக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய் பறித்து விற்கப்பட்ட பணம், விகாரையின் புனரமைப்பிற்காக கிடைத்த அன்பளிப்பு பணம், பிரதம பௌத்த மதகுருவிற்கு சொந்தமான பணம் என்பன அங்கு வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவை திருடப்பட்டிருப்பதாக தமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இவ்வாறு திருட்டுச் சம்பவம் பற்றி செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபர்களான கணவனும், மனைவியும் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சீ.சீ.டி.வி காணொளியின் உதவியுடன் சந்தேக நபர்கள் ஆண்டிகம பகுதியில் வைத்து நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களன தம்பதியினர் ரஸ்னாயக்கபுர, கொபேகன, மற்றும் மஹகும்புக்கடவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலுள்ள 10 இற்கும் மேற்பட்ட விகாரைகளிலும் இவ்வாறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பிங்கிரிய பொலிஸ் பிரிவிலும் இவ்வாறு பௌத்த விகாரையொன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் பிங்கிரிய பொலிஸார் அறிவித்துள்ளனர். எனினும், அந்த திருட்டுச் சம்பவம் பற்றியும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட கணவனும், மனைவியும் ஐஸ் போதை பாவனைக்கு பழக்கப்பட்டவர்கள் எனவும், நாளொன்றுக்கு 4,000 ரூபா வரை போதைப் பாவனைக்கு தேவைப்படுவதாகவும் சந்தேக நபர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் மொடர்பில் புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா மற்றும் புத்தளம் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹ ஆகியோரின் ஆலோசனையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சி.பி. ஹேரத்தின் மேற்பார்வையில் பல்லம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஸ்ரீவர்தனவின் தலைமையில் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உபாலி அபேரத்ன, பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த (4147) , பொலிஸ் கொஸ்தாபல் அமீத் (79185), பொலிஸ் கொஸ்தாபல் ரத்னாயக்க (72905) ஆகிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.