;
Athirady Tamil News

காணிகளை உடனடியாக கையளிக்க வேண்டும் – நில அளவை திணைக்களத்துக்கு கடிதம்!!

0

கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு உட்படாத பகுதி காணிகளை உடனடியாக மக்களிடம் கையளிக்க வேண்டும். சம்பந்தப்படாத பொது மக்களுக்கு காணி சுவீகரிப்பு தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் நில அளவை திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

வலி வடக்கு பிரதேச சபையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் வடக்கில் நகுலேஸ்வரம் ஜே 226 கிராம சேவையாளர் பிரிவில் மக்களுடைய காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை இடம்பெற்ற போது மக்களால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அது நிறுத்தப்பட்டது.

இந்த நிலைமையில் 2019 ஆம் ஆண்டு அப்போதைய வடமாகாண ஆளுநராக இருந்த சுரேன் ராகவன் காணிகளை விடுவிப்பதாக எழுத்து மூலம் தெரிவித்திருந்தும் இன்று வரை அந்த காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தேவைக்காக அளவீடு செய்ய முயற்சித்த போது மீண்டும் மக்களால் போராட்டங்கள் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட மக்களின் நிலங்களும் நிலஅளவைத் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படுவதாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த இடங்களில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உட்பட மயானங்கள் போன்ற முக்கிய இடங்கள் உள்ள நிலையில் இவ்வாறு உதாசீனமாக மேற்கொள்ளப்படும் நிலஅளவைத் திணைக்களத்தின் செயற்பாடுகள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என மக்கள் என்னிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு உட்படாத பகுதி காணிகளை உடனடியாக மக்களிடம் கையளிக்க வேண்டும். சம்பந்தப்படாத பொது மக்களுக்கு காணி சுவீகரிப்பு தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் நில அளவை திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.