;
Athirady Tamil News

திரையரங்குக்கு செல்ல ரஞ்சனுக்கு மறுப்பு !!

0

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இரட்டை வேடத்தில் நடித்த திரைப்பட நிகழ்வு சவோய் திரையரங்கில் மார்ச் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அதில் கலந்துகொள்ள ரஞ்சன் ராமநாயக்கவை அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை உயர்நீதிமன்றம் இன்று (09) நிராகரித்தது.

மேலும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இரண்டாவது மனுவை எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில், நேற்றைய தினம் மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழகுக்கு ஏதுவாய் அமைந்த கருத்து தொடர்பில், நீதிமன்றில் நிபந்தனையற்ற தமது கவலையைத் தெரிவிக்க தமது கட்சிக்காரர் எதிர்பார்ப்பதாக, ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட மன்றுக்கு தெரியப்படுத்தினார்.

குறித்த கருத்தின் மூலம், நீதிமன்றத்தை அவமரியாதைக்கு உட்படுத்தும் எண்ணம் தமது கட்சிக்காரருக்கு இருக்கவில்லை எனவும், அது தொடர்பில் சமர்ப்பணம் முன்வைக்க தினம் ஒன்றை வழங்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் கோரிநின்றார்.

இது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி சமர்ப்பணம் முன்வைக்குமாறு நீதியரசர்கள் குழாம் அறிவித்தது

மேலும், தனது கட்சிக்காரருக்கு இந்த திரையரங்கில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அவரை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட கோரினார்.

திரையரங்குக்கு அனுமதிக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த பிரதம நீதியரசர், பிரதிவாதிக்கு இந்த வழக்குக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட வில்லை என்றும் சிறைச்சாலைகள் சட்டத்துக்கு அமைய பிரதிவாதி செயற்படவேண்டும் என்று பிரதம நீதியரசர் அறிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக குற்றவாளியாக இனங்காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதியன்றுநான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

நீதித்துறையின் நற்பெயரை அவமதிக்கும் வகையிலும், நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டதன் பின்னர் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பகிரங்கமாக முன்நிறுத்தியதன் மூலம் ரஞ்சன் ராமநாயக்க, உயர் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.