;
Athirady Tamil News

கேரளாவில் மகனுடன் அரசு பணிக்கு தேர்வான அங்கன்வாடி பணியாளர்..!!

0

கல்வி, வேலைக்கு வயது முக்கியமில்லை. இடைவிடாத முயற்சி தான் தேவை என நிரூபித்துள்ளார் பெண் ஒருவர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரியாகோடு தெற்கு புத்தளத்தைச் சேர்ந்தவர் சந்திரன். கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிந்து (வயது 41). அங்கன்வாடி ஊழியர். இவர் தான் அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர். இவர் தனது மகன் விவேக்குடன் சேர்ந்து அரசுப் பணி (எல்.ஜி.எஸ்)தேர்வை எழுதினார். இதில் அவர் 92-வது ரேங்க் பெற்றுள்ளார். அவரது மகன் விவேக் 38-வது ரேங்க் வென்றார். இதன் மூலம் தாய்-மகன் இருவரும் அரசு வேலைக்கு தேர்வு பெற்றுள்ளனர். தான் தேர்வானது குறித்து பிந்து கூறியதாவது:- கடந்த 11 ஆண்டுகளாக அங்கன்வாடி ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, நல்ல ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக வீட்டு வேலைகள் மற்றும் அங்கன்வாடி வேலைகளுக்கு மத்தியில் படிப்பதற்கான நேரம் ஒதுக்கி ஆர்வத்துடன் படித்தேன். அப்போது எனது மகனும் பி.எஸ்.சி. புவியியல் படித்துவிட்டு வீட்டில் இருந்தான். இதனால் அவனையும் படிப்புக்கு கூட்டாளியாக்கினேன். 2 பேரும் பயிற்சி மையத்தில் சேர்ந்தோம். ஆனால் நான் வேலை பார்த்ததால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சி மையத்திற்கு சென்று வந்தேன். இதற்கிடையில் தினமும் வகுப்புகளுக்குச் செல்லும் விவேக், வகுப்பில் படித்ததை வீட்டில் எனக்கு கற்றுக் கொடுப்பான். தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன், லீவு போட்டுவிட்டு, நானும் மகனுடன் கோச்சிங் சென்டருக்குச் சென்று படித்து தேர்வு எழுதினேன். நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன் என எதிர்பார்த்தேன். தற்போது அது நடந்துள்ளது. மகனுடன் சேர்ந்து ஒன்றாக படித்தது வெற்றியை எளிதாக்கியது. இடைவிடாத முயற்சி அதற்கான பலனை தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.