;
Athirady Tamil News

உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும்: பிரதமர் !!

0

உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமே எதிர்கால சந்ததியினருக்கான நம்பகமானதொரு வழியை உருவாக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (15) நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில்” கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உற்பத்தித்திறன் எமக்கு சவாலாக உள்ளது. ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்தைப் போன்று, உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்டே எதிர்கால சந்ததியினருக்கான நம்பகமான வழியை உருவாக்க முடியும். எமது நாட்டின் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும். அந்தச் சவாலை வெற்றிகொள்வதில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்களை அடையாளம் காண்பது முக்கியமானதாகும்.

புதிய தலைமுறை இளைஞர்களின் படைப்பாற்றலுக்கு நாம் இடமளிக்க வேண்டும். இந்த மாற்றத்தின் மூலம் புதிய விடயங்களை உருவாக்க சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாரம்பரிய கோணத்தில் இருந்து விலகி சமூகத்தையும் நாட்டையும் புதிய யுகத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் மக்களின் உற்பத்தித்திறனை அங்கீகரித்து இவ்வாறு கௌரவிப்பது ஒரு ஒரு சிறந்த நடைமுறையாகும்.

உற்பத்தித்திறனை பாதிக்கும் அரச நிறுவன மற்றும் நிதி ஒழுங்கு விதிகளை மீளாய்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அவ்வாறு செய்யவில்லையென்றால், அது காலத்தை விரயம் செய்யும் செயற்பாடாகவே இருக்கும். கிராம மட்டத்தில் இருந்தே நாட்டை மேல் நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஒவ்வொரு துறையும் மாற்றப்பட வேண்டும். சில நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கப்படுகிறது. இது பொதுமக்களிடமிருந்து அரவிடப்படும் வரிப்பணம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நிறுவனங்களின் மூலம் தேசிய செல்வத்திற்கு எதுவும் சேர்க்கப்படுவதில்லை. இவ்வாறு உற்பத்தித்திறனற்ற பல அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளன.

இனிவரும் காலங்களில் பல்வேறு துறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அந்த மாற்றங்களின் அடிப்படையில் நாங்கள் புதிய சாதனைகளை அடைய வழி வகுக்கவேண்டியவர்கள் நீங்கள். பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியாமல், உற்பத்தித் திறன் இல்லாமலேயே எமது நாட்டில் பெரும் மூலதனம் செலவிடப்படுகிறது. சூரிய ஒளி அல்லது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.

எமது அயல் நாட்டில் ரயில்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மின்சாரத்தில் இயங்குகின்றன. வீண் செலவுகளுக்காக கடன்படுவதற்கு பதிலாக, நாமும் அப்படிப்பட்ட நிலைக்கு எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.