;
Athirady Tamil News

கணக்காய்வாளருக்கு காலக்கெடு!

0

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சரியான நேரத்தில் உதவி கிடைக்காமை உட்பட தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான விடயங்களை விசாரித்து கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்துக்கு மார்ச் 15 ஆம் திகதி வரை
உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் திங்கட்கிழமை (09) பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சரியான நேரத்தில் உதவியைப் பெறுவதில் தாமதம், சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களுக்காக நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்த வருடம் ஜனவரி 18ஆம் திகதி செலுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதியன்று உத்தரவிட்டிருந்தது.

நேற்றைய தினத்துக்கு (09) முன்னர் குறித்த கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கணக்காய்வாளர் நாயகம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, இந்த அறிக்கையை தொகுப்பதற்கு பல்வேறு அரச நிறுவனங்களிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற வேண்டியுள்ளதாக மன்றுக்கு அறிவித்ததை அடுத்து, கால அவகாசம் வழங்கப்பட்டது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, பிரபல இலங்கை நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங் மற்றும் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் உட்பட சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி நெருக்கடி குறித்து ஆராய குழுவை நியமிக்குமாறு கோரியும் மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் நாணயச் சபை ஆகியோர் உட்பட 39 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.