;
Athirady Tamil News

முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்ததைவிட உக்ரைன் போரில் அதிக வீரர்களை இழந்த ரஷியா- அதிர வைக்கும் புள்ளிவிவரம்!!

0

உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட 11 மதங்கள் ஆகின்றன. ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல உயிர்கள் பலியாகி உள்ளன. ஏராளமானோர் உயிருக்கு பயந்து வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் அரசு தரப்பில் அவ்வப்போது தங்கள் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ரஷியா தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகிறது. அவ்வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம் அதிர வைத்துள்ளது. உக்ரைனுக்குள் முழு அளவில் படையெடுப்பை தொடங்கிய 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷியா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால், முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்த வீரர்களை விட ரஷியாவுக்கு இந்த போரில் அதிக வீரர்களை பலி கொடுத்திருப்பதாக அர்த்தம்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனில் ரஷிய படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த புள்ளி விவரத்தை ஷேர் செய்துள்ளது. அதில், ரஷியாவிற்கு சொந்தமான 3,121 பீரங்கிகள் மற்றும் 4,877 வாகனங்கள் மற்றும் எரிபொருள் பீரங்கிகள், 2,104 பீரங்கி அமைப்புகள் முழு அளவிலான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முதல் உலகப் போரில் மொத்தம் 1,16,516 அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். அவர்களில் 53,402 பேர் போர்க்களத்தில் இறந்தனர், மீதமுள்ள 63,114 பேர் ஐரோப்பாவில் பணியாற்றும்போது, போர் அல்லாத பிற பாதிப்புகளாலும், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் காரணமாகவும் இறந்தனர் என்று நியூஸ் வீக் தெரிவித்துள்ளது. அதேசமயம், உக்ரைன் போரில் இதுவரை 6,000க்கும் குறைவான ரஷிய வீரர்களே இறந்திருப்பதாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாகவும் நியூஸ் வீக் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.