;
Athirady Tamil News

ஐ.என்.எஸ்.வகிர் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு!!

0

இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதேபோல் கடற்படையில் 17 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர் மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர் மூழ்கி கப்பல்கள் ரஷியா, ஜெர்மனி தயாரிப்புகள் ஆகும்.

இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டில் பிரான்சின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2007-ம் ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர் மூழூகி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது. முதல் நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019-ல் ஐ.என்.எஸ். காந்தேரி, 2021-ல் ஐ.என்.எஸ். கரஞ்ச், ஐ.என்.எஸ். வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் இன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் புதிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும். ஐ.என்.எஸ். வகிர் நீர்மூழ்கி கப்பல் 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல், மின்சாரத்தில் இயங்கும். எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டு உள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான்பகுதி, நிலப்பகுதிகளை குறி வைத்தும் தாக்குதல் நடத்த முடியும்.

இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கி இருக்க முடியும். அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகள் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது. கல்வாரி ரகத்தில் 6-வது மற்றும் இறுதி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.