;
Athirady Tamil News

சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதுவும் செய்யமுடியாது!!

0

சமஸ்டி ஆட்சி முறைமையை சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடுமையாக எதிர்க்கிறார்கள். சமஸ்டி வெறுப்பை தோற்றுவிக்கும்.

நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். சிங்கள மக்களையும், பௌத்த பிக்குகளையும் பகைத்துக் கொண்டு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது.

அதற்கான வாய்ப்பு இல்லை. நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலை அடைந்துள்ள போது 13 ஆவது திருத்தம் என்ற இருப்பக்கமும் பற்றி எரியும் பந்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார். என்பதை அறியவில்லை.

13 ஆவது திருத்தத்திற்கு சிங்களவர்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதால் 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்திற்கு கைவைக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முதலில் முன்வைத்தது.

சகல அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சியை ஆளும் தரப்பினரே பலவீனப்படுத்தினார்கள், அதனை அனைவரும் நன்கு அறிவார்கள். சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம் என்பதை மீண்டும் குறிப்பிடுகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை உரையில் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ளது. 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம், அரசியலமப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை ஒன்றுடன் ஒன்றுத் தொடர்புப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியில் பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவ சிதம்பரம் 1987 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைக்கு எதிரான பாரதூரமான விடயங்களை இந்தியாவிடம் குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு அவர் இந்தியாவிடம் வலியுறுத்தினார்.

சிவ சிதம்பரத்தின் யோசனைகளை செயற்படுத்தியிருந்தால் 1987 ஆம் ஆண்டுக்கு முன்னரே இலங்கையில் யுத்தம் தோற்றம் பெற்றிருக்கும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரம் தொடர்பில் இந்தியா மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக 1987 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் விடுதலை புலிகள் தாக்கம் தீவிரமடையும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் கலவரம் தோற்றம் பெறும் என புலனாய்வு தகவல் கிடைக்கப் பெற்றும் ஜே.ஆர் ஜயவர்தன கடும் அழுத்தத்திற்கு மத்தியில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அமர்தலிங்கம் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

இலங்கை இவ்வாறான பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டது. இதன் விளைவாகவே பிற்பட்ட காலப்பகுதியில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.

சமஷ்டி ஆட்சி முறையில் அதிகார பகிர்வு அவசியம் என வடக்கு தலைமைகள் குறிப்பிடுகிறார்கள். சமஷ்டிக்கு சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். சமஷ்டி என்றால் வெறுப்புக்கள் தோற்றம் பெறும். 13 பிளஸ் என மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு குறிப்பிட்ட காரணத்தினால் தற்போது சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

மாகாண சபை தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது உயர்நீதிமன்றம் ஒருசில திருத்தங்களை முன்வைத்தது.13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் நாடு பிளவுப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வாறன பின்னணில் எவ்வாறு 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக அமுல்படுத்துவது.

1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும், அரச தலைவர்களும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.

மாகாண சபை நிர்வாக கட்டமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை என்ற யோசனையை கொண்டு வந்தார். தேர்தலும் இடம்பெற்றது, பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை இரத்து செய்யப்பட்டது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வு காண வேண்டும். நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் காணப்படும் போது இருபுறமும் பற்றி எரியும் விளக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார் என்பதை அறியவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன 13 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஜனாதிபதிகளாக பதவி வகித்த எவரும் 13 ஆவது திருத்தத்தில் கை வைக்க செல்லவில்லை.

எனது ஆட்சி காலத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

சிங்கள பௌத்த மக்களை பகைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது, ஆகவே நாட்டின் இன அடிப்படையில் பிளவுப்படாமல் அனைவரும் வாழ வேண்டும். நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது 13 ஆவது திருத்தம் ஊடாக பிறிதொரு பிரச்சினை தோற்றம் பெற இடமளிக்க முடியாது.

மாவட்ட அபிவிருத்தி சபை ஸ்தாகிப்பப்பட வேண்டும். உலக நாடுகளில் சமஸ்டி ஆட்சி உள்ள போது இலங்கையில் ஏன் சமஸ்டி ஆட்சி முறைமையை அமுல்படுத்த முடியாது என தமிழ் அரசியல் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். பிற நாடுகளை போல் சமஷ்டி ஆட்சியை அமுல்படுத்தும் தன்மை இலங்கையில் தற்போது இல்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.