;
Athirady Tamil News

கூட்டுறவு சங்க குடோனின் ஷட்டரை உடைத்து 1,300 கிலோ அரிசியை தின்று ஏப்பம் விட்ட காட்டு யானை!!

0

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா அரேஹள்ளி அருகே அனுகட்டா கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் விவசாய கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே விவசாய பொருட்களை வைக்கும் குடோன் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வினியோகம் செய்வதற்காக தலா 100 கிலோ எடையிலான 13 மூட்டை அரிசி கொள்முதல் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கூட்டுறவு சங்கத்தின் ஷட்டர் கதவை உடைத்து எறிந்தது. பின்னர் தும்பிக்கையை உள்ளே விட்டு, அங்கு வைத்திருந்த அரிசி மூட்டைகளை இழுத்து அரிசியை தின்றது. இவ்வாறு 13 மூட்டை அரிசியை ஒரே ஒரு காட்டு யானை தின்று ஏப்பம் விட்டது.

பின்னர் அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. நேற்று காலை கூட்டுறவு சங்கத்தை திறக்க வந்த செயலாளர் சதீஷ் வந்தார். அப்போது குடோனின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு அரிசி சாக்குப்பைகள் வெளியே கிடப்பதையும், அரிசி சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அதிகாலை 4.15 மணி அளவில் வந்த காட்டு யானை, கூட்டுறவு சங்க குடோனின் ஷட்டரை உடைத்து சாக்குப்பைகளை வெளியே இழுத்து போட்டு அரிசியை தின்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. 13 மூட்டைகளில் இருந்த 1,300 கிலோ அரிசியையும் யானை ருசித்து ஏப்பம் விட்டு சென்றதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சம்பவம் பற்றி ஆரேஹள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக காட்டு யானை தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் தற்போது 13 மூட்டை அரிசியை தின்றுவிட்டு சென்றுவிட்டதாகவும், எனவே காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதைகேட்டறிந்த வனத்துறையினரும் காட்டு யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 22-ந்தேதி இதே கூட்டுறவு சங்க குடோன் கதவை உடைத்து காட்டு யானை 450 கிலோ அரிசியை தின்றுவிட்டு சென்ற நிலையில் தற்போது மீண்டும் காட்டு யானை 1¼ டன் அரிசியை ருசித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.