;
Athirady Tamil News

தேர்தல் கடமைகளை இடைநிறுத்தவும் !!

0

தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் தீர்மானத்தை அடுத்து, நாளையதினம் (20) முதல் வழமையான அலுவலக நேரங்களில் செயற்படுமாறும் தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேரக் கடமைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய பட்டியலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், உதவித் தேர்தல் அதிகாரிகளுக்கும் ஆணையாளர் நாயகம் அனுப்பியுள்ளார்.

வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்த நாட்களில் அலுவலகத்தை ஏதேனும் விசேட பணிக்காக திறக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்று கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பணிபுரியும் தற்காலிக மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் சேவைகள் பிப்ரவரி 17ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அலுவலக நேரத்துக்குப் பின்னர் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பணிகளுக்காக ஏனைய அரச துறைகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் அந்தந்த பணியிடங்களுக்கு திருப்பி அனுப்பப்படல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படவேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.