;
Athirady Tamil News

நெல்லின் ஈரப்பதம் அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி- விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

0

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பலத்த மழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. வயலில் தேங்கிய மழை நீரை வடியவைத்து பயிரைக் காப்பதற்கான பணிகளை விவசாயிகள் செய்தும் பலன் இல்லை. இதேபோல் அறுவடைசெய்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல்லும் ஈரப்பதத்தால் முளைத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஆய்விற்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை பெய்ததால் 2.15 லட்சம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. ஆய்வின் போது 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என்று அமைச்சர்களிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இவை அனைத்தும் ஆய்வறிக்கையாக முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்திட வேண்டும் என்று கடிதம் எழுதினார்.

அதன் அடிப்படையில் மத்திய அரசின் ஆய்வு குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுடப் அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை மத்திய அரசிற்கு தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நெல்லின் ஈரப்பதத்தின் அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு விவசாய சங்கங்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.