;
Athirady Tamil News

ரூ.329 கோடியில் நவீனமாகும் காட்பாடி ரெயில் நிலையம்!!

0

தமிழ்நாட்டின் முக்கியமான ரெயில் நிலையங்களில் காட்பாடியும் ஒன்று. நாளொன்றுக்கு சராசரியாக 37,595 பயணிகளை கையாளும் இந்த ரெயில் நிலையம் தற்போது தெற்கு ரெயில்வே மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை-பெங்களூர் மார்க்கத்தில் வேலூர் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளதும். வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை, சிஎம்சி மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம் மற்றும் தங்க கோவில் போன்ற முக்கிய இடங்கள் காட்பாடியை சுற்றியே அமைந்துள்ளதால் இந்த ரெயில்நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காட்பாடி ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.329.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மறுசீரமைப்பு பணிகளை 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ரெயில் நிலையத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ரெயில் நிலையக் கட்டிடம் 2 கட்டங்களாக இடிக்கப்பட்டு, அனைத்தும் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும். தெற்குப் பக்கத்தில், ரெயில் நிலையத்திற்கு வரும் மற்றும் ரெயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளை பிரிப்பதற்காக ஒரு தனி வருகை முனையமும், புறப்பாடு முனையமும் கட்டப்படும்.

வடக்குப் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய முனையம் கட்டப்படும். அனைத்து கட்டடங்களும் காட்பாடி-வேலூர் கோட்டை நகரத்தின் தழுவலோடு, தொன்மை மாறாமல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், அதே நேரத்தில் புதிய தொழில்நுட்ப கட்டட கலையுடன் அமைய உள்ளது. தெற்குப் பகுதியில் அமைய உள்ள புறப்பாடு முனையக் கட்டிடம் தாழ்தள பால்கனி உடன் 4 மாடியுடன் 10,250 ச. மீ. இல் உலகத் தரத்தில் கட்டமைக்கப்படும். தரை தளத்தில் பயணிகள் புழக்கத்திற்கு இடவசதியும், புறப்பாடு பகுதி, உதவி மையம், ஏசி காத்திருப்பு அறை, முன்பதிவு பயணச் சீட்டு அலுவலகங்கள், எஸ்கலேட்டர், மின் தூக்கிகள், மற்றும் பால்கனி தளத்தில் ஓய்வறைகள் இருக்கும். முதல் தளத்தில் ஏசி மற்றும் ஏசி அல்லாத காத்திருப்பு அறை, பொருட்கள் வைப்பு அறை மற்றும் ரெயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன.

புறப்படும் முனைய கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் பெண்கள் காத்திருப்பு அறை, ஏசி அல்லாத காத்திருப்பு அறை, குழந்தை பராமரிப்பு மற்றும் வணிகப் பகுதி மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் வணிக நிறுவனங்கள் அமைய உள்ளன. தெற்கு பகுதியில் அமைய உள்ள வருகை தாழ்தள பால்கனி வசதியுடன் 4 மாடியுடம் 10,250 சதுர மீட்டரில் அமைய உள்ளது. தாழ்தளத்தில் பயணிகளின் வசதிக்காக உதவி மையம், சுற்றுலா தகவல் மையம், பொருட்கள் வைப்பறை மற்றும் ரெயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன.

இதன் முதல் தளத்தில் பல்வேறு ரெயில்வே அலுவலகங்களும் மற்ற மூன்று தளங்களும் வணிக நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. புறப்பாடு மற்றும் வருகை முனையங்களை இணைப்பதற்காக இரு சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகை மற்றும் புறப்பாடு பயணிகளை பிரிப்பதற்காக 2 பொதுத்தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவை வருகை முனையத்திலிருந்து அனைத்து நடைமேடைகள் மற்றும் வடக்கு முனையத்தை இணைக்கும்.

இதே போலவே புறப்பாடு முனைய பொதுத்தளம் புறப்பாட்டு முனையத்தை அனைத்து நடைமேடைகள் மற்றும் வடக்கு முனைய கட்டடத்துடன் இணைக்கும். அனைத்து நடைமேடைகளிலும் போதுமான அளவு எஸ்கலேட்டர், மின் தூக்கி, படி வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு பொது தளங்களும் பயணிகளுக்கான வசதிகளுடன் நடைமேடைகள் பயணிகளுக்கு எளிதில் புலப்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. தரை தளத்தில் 600 சதுர மீட்டரில் அமைய உள்ள வடக்கு முனையம் பயணச்சீட்டு மையம், புறப்பாட்டு பகுதி ஆகியவற்றுடன் அமைய உள்ளது. வடக்கு முன்னயத்தின் முன் பகுதி 300 சதுர மீட்டரில் அமைய உள்ளது.

வடக்கு முனையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பகுதியாக இது அமைய உள்ளது. இந்த பகுதியில் வாகனங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதற்கான வசதிகளும் அமைய உள்ளது. இந்த பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதி 6 மாடியுடன் 9250 சதுர கிலோ மீட்டரில் பிரமாண்டமாக அமையுள்ளது. இதில் 258 கார்கள், 2120 இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ள முடியும். புறப்பட்டு முனையத்திலிருந்து கார் பார்க்கிங் வருவதற்கு அகலமான சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.