யாழ்ப்பாணம் – மந்திகை வீதியில் இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், காரின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, அதனை வீதியோரத்திலிருந்த பாலத்திற்குள் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிவேகமாக வந்த கார், வல்லைப் பகுதியில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. இதன்போது கார் அங்கிருந்த சேற்றுக்குள் புதைந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய மகளின் இரண்டு கால்களும் முறிவடைந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விபத்துக்குள்ளான காரை மீட்டெடுக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.