;
Athirady Tamil News

கடும் நிதி நெருக்கடி… பாகிஸ்தான் மருத்துவமனைகளில் இன்சுலின், டிஸ்பிரின் மருந்துகள் தீர்ந்துவிட்டன!!

0

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், ஆபத்தான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், டாலர் அழுத்தத்தையும் எதிர்கொள்கிறது. இதனால் நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நிதி நெருக்கடியால் பாகிஸ்தானின் சுகாதாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகள் அல்லது உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனால், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகளை நிறுத்திவைக்க வேண்டும் என டாக்டர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆபரேஷன் தியேட்டர்களில், இதயம், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மயக்க மருந்துகள், இரண்டு வார தேவையைவிட குறைவாகவே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலைமை நீடித்தால் மக்களின் துயரங்கள் அதிகரிப்பதுடன், பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில் வேலை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடிக்கு நிதி அமைப்புமுறையை மருந்து உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வணிக வங்கிகள் தங்கள் இறக்குமதிகளுக்கு புதிய கடன் தொடர்பான கடிதங்களை வழங்கவில்லை என்றும் கூறி உள்ளனர். முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறையைக் கண்டறிவதற்காக அரசாங்க ஆய்வுக் குழுக்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டதாக பஞ்சாப் மருந்து விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

சில பொதுவான மருந்துகள், முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை பாதிக்கிறது என்று சில்லறை விற்பனையாளர்கள் கூறி உள்ளனர். இந்த மருந்துகளில் பனாடோல், இன்சுலின், புரூஃபென், டிஸ்ப்ரின், கால்போல், டெக்ரல், நிம்சுலைட், ஹெபமெர்ஸ், புஸ்கோபன் மற்றும் ரிவோட்ரில் போன்ற மருந்துகள் அடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.