;
Athirady Tamil News

உ.பி.: மவுனி அமாவாசையை முன்னிட்டு பிரயாக்ராஜில் கடும் குளிரில் புனித நீராடிய பக்தர்கள்

0

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கம். இதன்படி, கடந்த 3-ந்தேதி பிரயாக்ராஜில் பவுர்ணமி தினத்தில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் தொடங்கியது.

இந்த மகாமேளா பிப்ரவரி 15-ந்தேதி வரை 44 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதேபோன்று கங்கை நதியிலும் புனித நீராடினர். இதில், ஜனவரி 15 (மகர சங்கராந்தி), ஜனவரி 18 (மவுனி அமாவாசை), ஜனவரி 23 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 1 (மகி பூர்ணிமா) மற்றும் பிப்ரவரி 15 (மகா சிவராத்திரி) ஆகியவை புனித நீராடல் செய்வதற்கான முக்கிய நாட்கள் ஆகும்.

இதன்படி, கடந்த 15-ந்தேதி மகர சங்கராந்தி தினத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு புனித நீராடினர். இந்த நிலையில், மவுனி அமாவாசையை முன்னிட்டு பிரயாக்ராஜில் சங்கமம் பகுதியில் இன்று பக்தர்கள் திரளாக வந்திருந்து கடும் குளிரிலும் புனித நீராடினர். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன என பக்தர்கள் தெரிவித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

புனித நீராட வரும் பக்தர்களின் வசதிக்காக உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் மொத்தம் 12,100 அடி நீளத்திற்கு குளியல் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சீரான வாகன போக்குவரத்துக்காகவும் இந்த ஆண்டு 42 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.