;
Athirady Tamil News

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!!

0

மார்ச் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள், யாழ். மாநகர சபையினால் கோரப்பட்டுள்ள விற்பனை மேம்படுத்தல் வரி முற்பணத்தைச் செலுத்தாவிடின் நிகழ்வுக்கான அனுமதியை வழங்குவதில்லை என்றும், மாநகர சபையினால் வழங்கப்படும் நலச் சேவைகளை வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிதிக்குழு, இன்று(27) காலை மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோர்ல்ட் தலைமையில் கூடியது. இதன்போது, சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட வரிச் சலுகைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்த நிதிக்குழு மேற்சொன்னவாறு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் 2020,2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கான விற்பனை மேம்படுத்தல் வரி மற்றும் கேளிக்கை வரி நிலுவையாகச் சுமார் 40 லட்சம் ரூபா நீண்ட காலமாகச் செலுத்தப்படாமல் ஏற்பாட்டாளர்கள் காலத்தைக் கடத்தியுள்ளனர். இது தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நீண்ட விவாதத்தின் பின், 2019 முதல் 2022 வரையான காலப்பகுதிக்குரிய வரி நிலுவையை முழுமையாகச் செலுத்த வேண்டும் எனவும், 2023 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரி மதிப்பீட்டின் 50 வீதத்தைச் செலுத்தினால் மட்டுமே நிகழ்வுக்கான அனுமதி வழங்கப்படும் எனவும் சபை தீர்மானித்து ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்திருந்தது.

இதனையடுத்து 2022 ஆம் ஆண்டு வரையான நிலுவையான ரூபா 44 லட்சத்தைச் செலுத்தியுள்ள ஏற்பாட்டாளர்கள், 2023 ஆம் ஆண்டுக்கான வரி முற்பணத்தைச் செலுத்தாமல், வரிக் கழிவு வழங்குமாறு கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர். எனினும், வர்த்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ள வர்த்தகர்களிடம் முழுமையான கட்டணம் அறவிட்டுள்ள ஏற்பாட்டாளர்கள் மாநகர சபைக்குரிய வரியைச் செலுத்தப் பின்னடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதால், கடந்த கால – கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் மாநகர சபையினால் கோரப்பட்டுள்ள விற்பனை மேம்படுத்தல் வரி முற்பணத்தைச் செலுத்தாவிடின் நிகழ்வுக்கான அனுமதியை வழங்குவதில்லை என்றும், மாநகர சபையினால் வழங்கப்படும் நலச் சேவைகளை வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் தொடர்பில் உடனடியாக ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.