;
Athirady Tamil News

தரிசனத்துக்கு பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு : கோவிலை பூட்டி சீல் வைத்த போலீசார் !!

0

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அப்போது கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அனுமதியோடு பட்டியல் இன மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் 48 நாள் மண்டகப்படி நடந்து வந்தது. அப்போது 48 நாளில் ஏதாவது ஒரு நாளாவது மண்டகப்படியில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பட்டியலின மக்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி உண்டு. நீங்கள் தடுப்பது சரியில்லை என கூறினர்.

இருந்த போதிலும் பட்டியல் இன மக்களை மண்டகப்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மற்ற இன மக்களில் சிலர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி தலைமையில் பட்டியல் இனமக்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். தொடர் எதிர்ப்பால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே தாசில்தார் பிரபாகர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்த கூட்டத்திலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தீர்வு வரும் வரை மலை மாரியம்மன் கோவில் போலீசார் கட்டுப்பாட்டில் இருப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மலை மாரியம்மன் கோவிலை போலீசார் பூட்டி சீல் வைத்ததோடு போலீசார் பாதுகாப்பும் அளித்துள்ளனர். இதனால் ஆழம்பள்ளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.