;
Athirady Tamil News

பாவ மன்னிப்பு தரும் நோன்பு!!

0

புனிதம் நிறைந்த ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்து திருக்குர்ஆனும், நபி மொழிகளும் விரிவாக தெரிவித்துள்ளன. பாவ மன்னிப்பு வழங்குவதுடன் மனித நேயத்தையும், இறையச்சத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ரமலான் நோன்பு அமைகின்றது. ‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகுவீர்கள்’, என்று திருக்குர்ஆன் (2:183) நோன்பின் சிறப்பு குறித்து விளக்குகிறது. நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘எவர் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு வைக்கிறாரோ அவரது கடந்த காலப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நூல்: புகாரி, முஸ்லிம்) நபிகள் நாயகத்தின் இன்னொரு அறிவிப்பில் இப்படி வந்திருக்கிறது: ‘நோன்பாளிக்கு இரண்டு சந்தோஷங்கள் இருக்கின்றன. ஒன்று- நோன்பு திறக்கின்ற நேரம், மற்றொன்று- மரணத்திற்குப் பின் தன் இறைவனை சந்திக்கின்ற நேரம். (நூல்: முஸ்லிம்) நோன்பைக் குறித்து இன்னும் சற்று விரிவாக இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் இப்படி: ‘ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ முடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.

ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம் உங்கள் மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும். (திருக்குர்ஆன் 2:185) புனித ரமலான் மாதத்தில் தான் மனித குலத்துக்கு நேர்வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பெற்றது என்றால் அந்த மாதம் எவ்வளவு மகத்துவமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்: “நோன்பும், குர்ஆனும் மறுமை நாளில் இந்த அடியானுக்காக (அவன் சரியாக பயன்படுத்தியிருந்தால்) பரிந்துரை செய்யும்”. (நூல்: திர்மிதி).

ஆக, குர்ஆனுக்கும் நோன்புக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு, இறைநெருக்கத்தை இந்த இரண்டின் மூலம் தான் நாம் பெற்றுக்கொள்ள முடியும், எனவே அவற்றிலிருந்து விலகிச்செல்லாமல் நெருக்கமாக இருக்க வேண்டும். ஒருவன் இறைநெருக்கத்தைப் பெற்று விட்டால் அதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்? நோன்பு என்பது இறைவன் தரும் இனிய சோதனையல்ல… அவன் நமக்கு அருளிய அருட்கொடைகளுக்காக நாம் செய்ய வேண்டிய நன்றிக் கடன் தான் இந்த நோன்பு. இதனால் தான் ‘இதை நாம் உங்களை சிரமப்படுத்துவதற்காக கடமையாக்கவில்லை’ என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான், நம்மை சிரமப் படுத்திப் பார்க்க வேண்டும் என்ற தேவையும் அவனுக்கு அறவே இல்லை. சிலநேரங்களில் நம் வாழ்வில் சில சோதனைகள் வருவதுண்டு.

ஆனால் இந்த நோன்பு அப்படிப்பட்டதல்ல. அப்படி நினைக்க வும் கூடாது, அப்படி நினைப்பது நல்லடியார்களின் நற்பண்புமல்ல. நோன்பு நோற்பதால் மருத்துவ ரீதியாக நற்பலன்கள் பல இருக்கின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்று. இன்றைய நவீன மருத்துவ உலகம் ‘பசித்திரு, பசித்த பின் புசி’ என்று சொல்கிறது. ஒரு மாத காலம் கடைபிடிக்கப்படும் நோன்பு மனித உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் பலரும் உணவுக்கட்டுப்பாட்டை வலியுறுத்திக் கூறுகின்றனர். கட்டுப்பாடற்ற உணவும், பசிக்காமல் புசிப்பதும் தான் அனைத்து நோய்களுக்கும் அடிப்படை என்கின்றனர். இதை அவரவர் சுயமாக கடைபிடிப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கிறது.

இதனால் தான் என்னவோ எல்லா மதங்களும், மாா்க்கங்களும், சமயங்களும் ஏதோ ஒரு வடிவத்தில் நோன்பை கடமையாக்கி இருக்கின்றன என்றால் அதுமிகையல்ல. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளைத் தாண்டியும் பழமைமாறாத பழந்தமிழ் மறையான திருக்குறளிலும் ‘நோன்பு’ என்ற சொல் இடம் பெற்றிருப்பது அதிசயிக்கத்தக்கது; ஆச்சரியப்படத்தக்கது. ஆக பசித்திருத்தல் என்பது எல்லாச் சமூகங்களிலும் இடம் பெற்றிருப்பது நன்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. இறையச்சத்துடன் நோன்பு நோற்றிடுவோம், இறையருளுடன் நன்மைகளை பெற்றிடுவோம். மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

You might also like

Leave A Reply

Your email address will not be published.