;
Athirady Tamil News

“கனத்த இதயத்துடன் முடிவு செய்வோம்” – தலிபான்கள் நெருக்கடியால் வெளியேறுகிறதா ஐ.நா?

0

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளைச் செய்துவரும் ஐ.நா. குழு, தலிபான்களின் கெடுபிடி காரணமாக வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. தலிபான்கள் ஒத்துழைப்பு கிட்டாவிட்டால் ஆப்கனிலிருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தயாராக இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் அங்கே தலிபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். தலிபான்களின் ஆட்சி இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தின்படியே நடைபெறும் என அவர்கள் பிரகடனம் செய்தனர். இருப்பினும் 1990-களில் இருந்ததுபோல் அல்லாமல் சுதந்திரமான ஆட்சி இருக்கும் என்று கூறினர். ஆனால், அதை எதுவுமே அவர்கள் எள்ளளவும் கடைப்பிடிக்கவில்லை.

தலிபான்கள் கைகளில் அதிகாரம் வந்த பின்னர் அங்கே பெண்களின் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. ஆடைக் கட்டுப்பாடு, பெண் கல்விக்குத் தடை, பெண்கள் மருத்துவம் தவிர வேறு துறைகளில் பணியாற்றத் தடை, இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடத் தடை, சினிமா, பாட்டு, கேளிக்கைகளுக்கு தடை, சிறுவர்கள் முடித்திருத்ததிற்கு கட்டுப்பாடு, தாடி வளர்ப்பது கட்டாயம் போன்ற கலாச்சார காவலர்கள் வேலையை மட்டுமே பார்ப்பதால் அங்கே பசியும், பட்டினியும், வறுமையும் தலைவிரித்தாடுகிறது. இவை மட்டுமல்லாமல் குற்றவாளிகளுக்கு பொது இடங்களில் கொடூரமான தண்டனைகளை வழங்குவதும் மீண்டும் தொடங்கியுள்ளது.

இருப்பினும், அங்கு ஐ.நா. அமைப்பு இன்னும் சில மனித உரிமைகள் அமைப்புகள் மக்களுக்கு மனிதாபிமான அடிபப்டையில் உதவிகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், ஐ.நா. அமைப்பிற்காக உள்ளூர் பெண்கள் வேலை பார்க்கக் கூடாது என்று அண்மையில் தலிபான்கள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். இப்படியான சூழலில் பலகட்ட முயற்சிக்குப் பின்னரும் கூட தலிபான்களை ஆக்கபூர்வ ஆட்சியை நோக்கி மடைமாற்ற முடியாததால் வரும் மே மாதத்தோடு ஆப்கனில் இருந்து வெளியேறுவது குறித்து ஐ.நா. பரிசீலித்து வருகிறது.

ஆப்கனில் 28 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகளை வேண்டி காத்திருக்கும் சூழலில் ஐ.நா இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்காவும் ஜி7 உறுப்பு நாடுகளும் கூட மனிதாபிமான உதவிகளை நிறுத்துவதாக எச்சரித்து வருகிறது. ஆனால், தலிபான்கள் தங்களின் முடிவை சிறிதும் மாற்றிக் கொள்வதாக இல்லை. இந்நிலையில்தான் ஐ.நா. இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி டுஜாரிக் கூறுகையில், “கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தலிபன்கள் ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட ஆப்கனைச் சேர்ந்த 2700 ஆண்கள், 600 பெண்கள் பணிக்கு செல்லக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர். அதனால் அவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இப்போதைக்கு ஐ.நா.வின் குழுவில் உள்ள 600 பேர் தான் பணியில் உள்ளனர். இவர்களில் 200 பேர் பெண்கள்.

ஆப்கானிஸ்தானில் மட்டும் ஐ.நா. உதவிக்குழு இல்லாவிட்டால் லட்சக்கணக்கான குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், இளம் பெண்களின் நிலை என்னவாகும் என்றுகூட என்னால் யோசிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் கனத்த இதயத்துடனேயே வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும். அது பெண்களையும் குழந்தைகளையும் தான் அதிகம் பாதிக்கும் இருப்பினும் வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.