;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தல்: டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு தள்ளுபடி ஆகிறது? !!

0

மே 10-ந்தேதி நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். இதனால் தேர்தல் அலுவலகங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர். இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடந்த 17-ந்தேதி மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அந்த தொகுதியில் போட்டியிடும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ஆர்.அசோக்கின் சொந்த தொகுதியான பத்மநாபநகரில் அவரை எதிர்த்து டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. போட்டியிடுவார் என்று பேசப்பட்டது.

கடைசி நாளான நேற்று அவர் அந்த தொகுதியில் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக டி.கே.சுரேஷ் கனகபுரா தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் பத்மநாபநகரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகுநாத் நாயுடு மாற்றப்படாமல் போட்டியில் நீடிப்பது உறுதியாகியுள்ளது. கனகபுராவில் மனு தாக்கல் செய்தது குறித்து டி.கே.சுரேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். இந்த சதியை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முன்எச்சரிக்கையாக நான் கனகபுராவில் மனு தாக்கல் செய்துள்ளேன். வருமான வரித்துறை மூலம் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள். வருமான வரித்துறை கடந்த 4, 5 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு நோட்டீசு அனுப்பி உடனே நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.

அதற்கு நாங்கள், தற்போது தேர்தல் நடைபெறவதால், அதில் நாங்கள் பரபரப்பாக இயங்கி வருகிறோம், அதனால் தேர்தலுக்கு பிறகு நேரில் ஆஜராவதாக தெரிவித்துள்ளோம்” என்றார். இதற்கிடையே கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 17-ந்தேதி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவருக்கு ரூ.1,414 கோடி சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 68 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அவர் வருமான வரி கணக்கில் காட்டியுள்ள வருவாய்க்கும், தற்போது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள், டி.கே.சிவக்குமாரின் சொத்து விவரங்களையும், அவர் தாக்கல் செய்த வருவாய் விவரங்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் ஏதாவது வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டால், டி.கே.சிவக்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் கனகபுரா தொகுதியில் அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. நேற்று கடைசி நாளில் மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.