;
Athirady Tamil News

நிலுவைக் கட்டணத்தை செலுத்தாத மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (7) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க (Gevindu Kumaratunga) முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “2022 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னரான காலப்பகுதியில் 70 இலட்சம் மின்பாவனையாளர்கள் மின்விநியோக கட்டமைப்பில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பல மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டன.

மின்கட்டண திருத்தம்
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மின்கட்டமைப்பில் கொள்கை ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மின்விநியோக கட்டமைப்பின் கொள்கை திருத்தம் செய்யப்பட்டதால் தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, கட்டணத்தை தொடர்ந்து குறைக்க முடியுமா என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் (Public Utilities Commission of Sri Lanka) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

இதேவேளை சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் விநியோகிக்கப்பட்டு நிலுவைக் கட்டணம் செலுத்தாத சுமார் 10 இலட்சம் மின்பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோகம் துண்டிப்பு
மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் நிலுவை கட்டணத்தை செலுத்தாவிடின் மின்விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, மின்பாவனைக்கான கணக்கும் இரத்து செய்யப்படும்.

மின்கட்டணத்தை செலுத்தாத தரப்பினரை இலக்கு வைத்து அவர்களுக்காக விநியோகத்தை துண்டிக்குமாறு எவருக்கும் பொறுப்பு வழங்கவில்லை. கட்டணம் செலுத்தாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இது நான் அமைச்சரான பின்னர் எடுத்த தீர்மானமல்ல, காலம் காலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் வழங்கப்பட்டு, கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அந்தக் காலப்பகுதிக்குள் கட்டணத்தை செலுத்தாவிடின் தான் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீள இணைப்பு பெற்றுக்கொள்ளப்படும் போது அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.