;
Athirady Tamil News

தைவான் விவகாரம் குறித்து சீன பகிரங்க எச்சரிக்கை..!

0

தைவான் விவகாரத்தில் தங்களை விமர்சிப்பவர்கள், அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் என்று சீனா எச்சரித்துள்ளது.

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்மாத தொடக்கத்தில் சீன இராணுவம், தைவானைச் சுற்றி மூன்று நாட்கள் பயிற்சிகளை அறிவித்தது.

இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்தது. மேலும், இந்த விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறையை அமெரிக்கா, தைவான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக விமர்சித்தன.

இதற்கு சீனா தற்போது எதிவினை ஆற்றியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை ஜிங் ஹாங் கூறும்போது,

“சமீபமாகவே தைவான் ஜலசந்தி முழுவதும் ஒருதலைப்பட்சமாகவும், ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்காவும், சீனாவை குற்றம்சாட்டி சில அபத்தமான பேச்சுக்கள் எழுந்தன.

இத்தகைய கருத்துகள் சர்வதேச உறவுகள் மற்றும் வரலாற்று நீதி பற்றிய அடிப்படை பொது அறிவுக்கு எதிரானது.

இதற்கான விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும். தைவான் விவகாரத்தில் சீனாவை விமர்சிப்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள்.

சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் ஒருபோதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். தைவான் விவகாரத்தில் விளையாடுபவர்கள் தங்களையே எரித்துக் கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது.

ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது.

மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.