;
Athirady Tamil News

டெல்லி மேயர் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி: துணை மேயர் பதவியும் கிடைத்தது!!

0

தலைநகர் டெல்லியில், வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 ஆக பிரிந்து இருந்த டெல்லி மாநகராட்சி, கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம் 272 வார்டுகள் 250 ஆக குறைந்தன. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி, ஒருங்கிணைந்த டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, 134 இடங்களை வென்று அசத்தியது. பா.ஜனதாவுக்கு 104 வார்டுகள் கிடைத்தன.

காங்கிரஸ் கட்சி 9 இடங்களை கைப்பற்றியது. 3 இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றினர். பெரும்பான்மையாக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு மேயர் பதவி எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. 4-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் கவுன்சிலர் ஷெல்லி ஒபராய், பா.ஜனதா வேட்பாளரை 34 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மேயர் ஆனார்.

துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்வு பெற்றார். டெல்லி மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவி ஆண்டுதோறும் பெண், பொது, ஒதுக்கீட்டு பிரிவினர் என இன சுழற்சி முறையில் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறும். அதன்படி இந்த நிதியாண்டு தொடங்கியதை தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு மீண்டும் ஷெல்லி ஓபராயும், துணை மேயர் பதவிக்கு மீண்டும் ஆலே முகமது இக்பாலும் போட்டியிட்டனர். ஷெல்லி ஓபராயை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளர் ஷிகாராய் நின்றார்.

முகமது இக்பாலை எதிர்த்து பா.ஜனதாவின் சோனி பாண்டே களம் இறங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினர். இதனால் ஷெல்லி ஓபராய் மீண்டும் மேயராக போட்டியின்றி தேர்வு பெற்றார். அதைப்போல துணை மேயர் பதவியும் போட்டியின்றி கிடைத்தது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.