;
Athirady Tamil News

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அடித்து கொன்றேன்- கைதான தாய் வாக்குமூலம்!!

0

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி ஊராட்சி புதூர் காடம்பட்டியில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அதே சூளையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பகுதியை சேர்ந்த சக்திவேல், இவரது மனைவி கலைவாணி (27) ஆகியோர் தங்களது ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கலைவாணியுடன் மல்லேசுக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை அறிந்த கணவர் சக்திவேல், தனது மனைவியை கண்டித்தார். ஆனால் கள்ளக்காதல் மோகத்தில் இருந்த கலைவாணி, கணவரை விட்டு விட்டு, தனது 1 வயது குழந்தையுடன் கள்ளக்காதலன் மல்லேஷ் வீட்டில் குடியேறினார்.

இந்நிலையில் குழந்தையை வளர்ப்பது குறித்து இருவருக்கும் இடையே கடந்த வாரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்துள்ளனர். இதில் மண்டை உடைந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிய குழந்தையை மறுநாள் தூக்கிச் சென்று ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தது. இது பற்றி டாக்டர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி மல்லேஷ்-கலைவாணி தப்பி ஓடி கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கலைவாணி போலீசாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம் வருமாறு:- எனக்கு ஏற்கனவே 3 கணவர்கள் உள்ளனர்.

இதில் 2 கணவர்களை பிரிந்து 3-வதாக சக்திவேலை திருமணம் செய்து கொண்டேன். போதிய வருமானம் இல்லாததால் நாங்கள் இருவரும் எங்களது ஒரு வயது குழந்தையுடன் சேலம் மாவட்டம் சிக்கம்பட்டி ஊராட்சி புதூர் காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்கு வந்தோம். இங்கு வேலை பார்த்து வந்த மல்லேஷ் என்பவர் என்னிடம் ஆரம்பத்தில் நல்ல நண்பர் போல் பழகினார். ஒரு கட்டத்தில் நெருங்கி பழக தொடங்கினார். நான் அவரை சத்தம் போட்டேன். ஆனால் மல்லேஷ் கேட்கவில்லை. தொடர்ந்து என்னை பின்தொடர்ந்து ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு மயக்கினார். அவரது காதல் வலையில் வீழ்ந்த நான், ஒரு கட்டத்தில் அதில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. இதனால் கடந்த மாதம் நான் எனது ஒரு வயது குழந்தையுடன் மல்லேஷ் வீட்டின் குடியேறினேன். இங்கு என்னை தொடர்ந்து மது பழக்கத்துக்கு ஆளாக்கினார்.

இந்நிலையில் குழந்தையை வளர்ப்பது குறித்து, எனக்கும், மல்லேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என மல்லேஷ் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 1-ந்தேதி இருவரும் சேர்ந்து மது குடித்தோம். பின்னர் உல்லாசமாக இருந்தோம். அந்த சமயத்தில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த நானும், மல்லேசும் சேர்ந்து குழந்தையை தூக்கி சுவற்றி அடித்தோம். இதில் படுகாயம் அடைந்த குழந்தை ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தது.

கள்ளக்காதலன் மல்லேசை நம்பினேன். அவர் எனது குழந்தையை கொலை செய்ய வைத்து எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு கலைவாணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, மல்லேஷை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையிலும், கலைவாணியை அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையிலும் அடைத்தனர். கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.