;
Athirady Tamil News

275 பேரை பலி கொண்ட கோர ரெயில் விபத்து- சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது !!

0

ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 1,175 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சென்னை-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் அதிகபட்ச சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது. மக்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்து எப்படி நேர்ந்தது என்பது தொடர்பாக முதலில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியானது. ரெயில்வே உயர்மட்ட குழு நடத்திய முதல் கட்ட விசாரணையில், “பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் தொடர்ந்து செல்ல பச்சை நிற சிக்னல் வழங்கப்பட்டது.

திடீரென அது மாற்றப்பட்டதால் பக்கவாட்டில் உள்ள மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், “விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக்கூடும்” என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள பெரிய ரெயில் விபத்துக்கள் அனைத்தையும் ரெயில்வே உயர்மட்ட குழுதான் விசாரித்துள்ளது. தற்போதுதான் முதல் முறையாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ரெயில்வே உயர்மட்ட குழு ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை இன்று தொடங்கினார்கள். 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்துக்கான விடையை தேடி இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.