;
Athirady Tamil News

சுந்தர காண்டம், ராமாயணம் படித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்- தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு !!

0

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சங்கத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான கர்பா சன்ஸ்கார் திட்ட தொடக்க விழா டெல்லியில் நடந்தது. தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த திட்டத்தை ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- விஞ்ஞான பூர்வமாகவும், ஆன்மீக முறையிலும் கர்ப்பிணிகள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும்.

இந்த அணுகுமுறை கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது. கிராமங்களில் கருவுற்ற பெண்களை ராமாயணம் மகாபாரதம் மற்றும் பல நல்ல கதைகளை படிக்க வேண்டும் என சொல்வார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டுமென்று பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். கர்ப்ப காலத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கும். இது போல் ராமாயணம், மகாபாரதம் படிப்பதால் பிரசவத்தின் போது பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் மன மற்றும் உடல் நலனை உறுதி செய்ய ‘சுந்தரகாண்டம்’, ராமாயணம் போன்ற இதிகாசங்களைப் படிக்க தொடங்க வேண்டும். கர்ப்பிணிகள் யோகாசனம் செய்து வந்தால் வயிற்றில் இருக்கும் கருமட்டும் இல்லாமல் தாய்க்கும் ஆரோக்கியம் கிடைக்கும். இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினாலே பிரசவ காலம் இனிமையாக இருக்கும். சுகமான பிரசவம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். தமிழிசை சவுந்தரராஜன் கவர்னர் மட்டுமின்றி, மகப்பேறு மருத்துவர் மற்றும் கரு சிகிச்சை நிபுணராவார். அவர் கூறிய இந்த அறிவுரை கர்ப்பிணிகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.